2000 டிசம்பர் 19 அன்று மிருசுவிலில் தமது வீடுகளை பார்வையிட சென்ற பொதுமக்கள் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு, சுட்டுக் கொல்லப்பட்டனர். இதுதொடர்பிலான வழக்கில் குற்றவாளியாக இனங்காணப்பட்டு, மரணதண்டனை விதிக்கப்பட்டிருந்த கைதியான இராணுவத்தின் சிறப்பு படையணியைச் சேர்நத சுனில் ரத்னாயக்க, ஜனாதிபதியின் விசேட பொதுமன்னிப்பின் கீழ், விடுதலை செய்யப்பட்டமைக்கு கடுமையான எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளது. கடுமையான நோயை பயன்படுத்தி இவ்வாறான நடவடிக்கை எடுப்பது தவறானது என்றும் அதன் பேச்சாளர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான வழக்குகள் பல முன்னெடுக்கப்படாத நிலையிலும் வேறு பலர் மேன்முறையீட்டில் விடுவிக்கப்பட்ட போதும் இந்த ஒருவர் தான் அவற்றுக்கு விதிவிலக்காக இருந்தவரென, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இவ்வாறான குற்றங்கள் தண்டிக்கப்பட மாட்டா என்பதை இது உறுதி செய்கிறது என்றும் அவர் சாடியுள்ளார்.
இதேவேளை, கொரோனாவை பயன்படுத்தி ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ விளையாடிவிட்டார் என சமூக வலைத்தளங்களில் பரவலாக பதிவுகள் இடப்பட்டுள்ளன.
இந்நிலையில், இலங்கையில் பாரதூரமான மனித உரிமை மீறல்களிற்கு பதிலளிக்கும் கடப்பாடு மிகவும் குறைவானதாக காணப்படும் நிலையில் மிருசுவில் படுகொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட சார்ஜன்ட் ரத்நாயக்காவை விடுதலை செய்வது என இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள தன்னிச்சையான தீர்மானம் மிகவும் கவலை அளிக்கும் செய்தியை தெரிவித்துள்ளது என சர்வதேச மன்னிப்புச்சபையின் தென்னாசியாவிற்கான இயக்குநர் பிராஜ் பட்நாயக் தெரிவித்துள்ளார்.
பயங்கரமான குற்றங்களை இழைத்த படைவீரர்கள், நீதிமன்றத்தினால் தண்டனை விதிக்கப்பட்டாலும் மன்னி;ப்பளித்து விடுதலை செய்யப்படுவார்கள் என்ற கவலை தரும் செய்தியை இந்த விடுதலை தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை ஜனாதிபதி தேர்தல் வேளையில் வழங்கிய இந்த விடயத்துடன் தொடர்புடைய ஏனைய வாக்குறுதிகள் குறித்தும் சர்வதேச மன்னிப்புச்சபை கவலை வெளியிட்டுள்ளது.
பாரிய நோய் தொற்று அபாயத்தை பயன்படுத்;தி பாரதூரமான குற்றங்களில் ஈடுபட்டவர்களை விடுதலை செய்வது கண்டிக்கதக்க விடயம் எனவும் என சர்வதேச மன்னிப்புச்சபையின் தென்னாசியாவிற்கான இயக்குநர் பிராஜ் பட்நாயக் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதிக்கான உரிமைகள் உள்ளன,நீதி நிலைநாட்டப்படுவதை உறுதி செய்யவேண்டிய கடப்பாடு இலங்கைக்குள்ளது எனவும் தெரிவித்துள்ள அவர் பல வருடங்களிற்கு பின்னர், மிருசுவில் படுகொலையால் பாதிக்கப்பட்டவர்கள் 2015 இல் நீதியை அனுபவித்துள்ளனர், ஜனாதிபதியின் ஒருதலைப்பட்சமான நடவடிக்கையால் நீதி தலைகீழாக மாற்றப்படுவது வெறுக்கத்தக்கது எனவும் தெரிவித்துள்ளார்