கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் வல்லரசு நாடான அமெரிக்கா உட்பட உலக நாடுகளில் பெரும்பாலானவை திணறிக் கொண்டிருக்கின்றன.
எல்லைகளைக் கடந்த சவாலாக மாறி மனித குலத்தையே அலற வைத்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 24 ஆயிரத்தை தாண்டியது.
வைரஸ் நோய்த் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அங்கு பாதித்தோரின் எண்ணிக்கை 85,268 ஆக உள்ளது.
அமெரிக்காவில் நேற்று(மார்ச் 26) ஒரே நாளில் 17,166 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அந்நாட்டில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 85,377 ஆக அதிகரித்துள்ளது. 1295 பேர் இதுவரை பலியாகி உள்ளனர். இதனையடுத்து கொரோனா பாதிப்பில், சீனா, இத்தாலியை பின்னுக்கு தள்ளி, அமெரிக்கா முதலிடம் பிடித்தது
கொரோனா போன்ற சர்வதேச அளவிலான சுகாதார நெருக்கடியை எதிர்கொள்ள புதிய கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்று ஜி20 நாடுகள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
கொரோனா நோய்த் தொற்று, உலகின் பல்வேறு நாடுகளைத் தாக்கி, அவற்றின் பொருளாதாரத்தை சிதைத்துள்ள நிலையில், ஜி20 நாடுகளின் அவசர ஆலோசனைக் கூட்டம் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.
ஜி20 நாடுகள் கூட்டமைப்பின் தலைவர் சவூதி அரேபிய மன்னர் சல்மான் பின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் இந்தியா ,சீனா, ஜப்பான், பிரான்ஸ், ரஷியா, அமெரிக்கா, ஜேர்மனி , கனடா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் காணொலி வாயிலாகப் பங்கேற்று தங்கள் கருத்துகளைத் தெரிவித்தினர்.
வரி விதிப்பை ரத்து செய்ய சீனா வலியுறுத்தல்:
ஜி20 நாடுகள் கூட்டத்தில் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் பேசுகையில், ‘ கொரோனா தொற்றுக்கு எதிராக உலகளாவிய யுத்தம் நடைபெற வேண்டும். கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பிற நாடுகளுடன் எங்கள் அனுபவங்களைப் பகிா்ந்துகொள்ளத் தயாராக இருக்கிறோம். கொரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்துகளைக் கண்டுபிடிப்பதற்காக ஒருங்கிணைந்த ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். சர்வதேச பொருளாதாரம் பிரச்சினைகளை தடுப்பதற்காக, நாடுகளுக்கு இடையேயான வர்த்தக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட வேண்டும். வரி வதிப்புகள் ரத்து செய்யப்பட வேண்டும்’ என்று கூறினார்..
கூட்டத்தின் முடிவில், ஜி20 நாடுகள் சார்பில் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
கொரோனா நோய்த்தொற்று பரவலால் சா்வதேச அளவில் சமூக, பொருளாதார, நிதி நிலைமை மோசமடைந்துவிட்டது. இந்த நேரத்தில், நிா்ணயிக்கப்பட்ட பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட இலக்குகளை அடையும் முயற்சியாக, சர்வதேச பொருளாதாரத்தில் 5 லட்சம் கோடி டொலரை (ரூ.350 லட்சம் கோடி) முதலீடு செய்வதற்கு ஜி20 நாடுகள் உறுதியளித்துள்ளன.
மேலும், வளரும் நாடுகளுக்கு நிதியுதவி அளிப்பதற்காக, பன்னாட்டு நிதியம், உலக சுகாதார நிறுவனம், மண்டல வங்கிகள் போன்ற சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றுவதற்கும் ஜி20 நாடுகள் உறுதிபூண்டுள்ளன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா’ தொற்றுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதை விட, நீரிழிவு மற்றும் ரத்த அழுத்த நோய்களுக்கு ஏற்கனவே வழங்கப்படும், 70 வகையான மருந்துகளை பயன்படுத்துவது, சிறந்த பலனை தரும் என, ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா தொற்றுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில், பல்வேறு நாடுகளும் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. மருந்து கண்டுபிடித்துவிட்டதாக, ஒரு சில நாடுகள் கூறி வந்தாலும், எதுவும் உறுதி செய்யப்படாத தகவலாகவே இருந்து வருகிறது.
இந்நிலையில், அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில், கொரோனா சிகிச்சைக்கான மருந்து தயாரிப்பது குறித்து, ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த ஆராய்ச்சியில், அத்வைத் சுப்ரமணியன், ஸ்ரீவத்ஸ் வெங்கட்ரமணன், ஜோதி பாத்ரா என்ற இந்திய ஆராய்ச்சியாளர்கள் உள்ளிட்ட குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
மனித உடம்பில் உள்ள, 332 புரதங்களை, கொரோனா வைரஸ் புரதங்கள், நேரடியாக தாக்குவது தெரிய வந்தது. இதையடுத்து, நீரிழிவு, ரத்த அழுத்தம், புற்றுநோய் போன்றவற்றுக்கு வழங்கப்படும், 70 வகையான மருந்துகள், கொரோனா சிகிச்சைக்கு சிறந்த பலனை தரும் என, ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதை விட, இந்த மருந்துகளை பயன்படுத்தி, பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்தும் பணியில் ஈடுபடுவதே, இப்போதைக்கு சிறந்த வழி’ என, அவர்கள் தெரிவித்தனர்.