அடுத்த வாரம் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான தேசிய அரசாங்கம் ஒன்று உருவாக்கப்படும் சாத்தியம் இருப்பதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
தேசிய அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு விருப்பம் தெரிவித்து, நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக திசநாயக்கவுக்கு, ஐக்கிய தேசியக் கட்சி நேற்று கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
நல்லாட்சி அரசுக்கான கொள்கைகளுடன், பல்வேறு கட்சிகளைக் கொண்ட தேசிய அரசாங்கம் ஒன்றை ஐக்கிய தேசியக் கட்சி அமைக்கவிருப்பதாக அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கு விரும்பும் எந்தக் கட்சிக்கும், ஐதேக இடமளிக்கத் தயாராக இருப்பதாக, ஐதேகவின் தலைவர்களில் ஒருவரான அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
தேசிய அரசாங்கத்தில் இணையும் கட்சிகள் பற்றி பின்னர் அறிவிக்கப்படும் என்றும், தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கான பிரேரணை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.