web log free
December 22, 2024

வெள்ளவத்தை தம்பதி 45 பேருடன் தொடர்பு

கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையான களுபோவில வைத்தியசாலை, நீர்கொழும்பு வைத்தியசாலை ஆகியவற்றின் இரு சிகிச்சை அறைகள் சீல் வைக்கப்பட்டு, அந்த இரு அறைகளிலும் இருந்த நோயாளர்கள், தாதிகள் உள்ளிட்ட பணிக்குழுவினர், வைத்தியர்கள் என அனைவரும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இலங்கையில் 2 ஆம் மரணமாக பதிவான கொரோனா தொற்றாளர் மற்றும் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கண்டறியப்பட்ட கொழும்பு 6 ஐச் சேர்ந்த தொற்றாளர் ஆகியோரின் நடவடிக்கை காரணமாக இந்தநிலைமை ஏற்பட்டதாக அவ்விரு வைத்தியசாலைகளினதும் பணிப்பாளர்கள் சுட்டிக்காட்டினர்.

இதனிடையே வெள்ளவத்தை  பகுதியில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள வயோதிப தம்பதியினர் கண்டறியப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின்  தலைமை மருத்துவ அதிகாரி வைத்தியர் ருவன் விஜயமுனி தெரிவித்தார்.

குறித்த தம்பதியினர் தலைநகரின் மூன்று வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்றுள்ளதாகவும், அவர்களது கொரோனா தொற்று அறிகுறிகளை அடையாளம் காணாது அந்த தம்பதியின் இரு வைத்தியர்களான பேத்திகளே அவ்வாறு வைத்தியசாலைகளில் அனுமதித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

84 வயதுடைய குறித்த தம்பதியினர் சுமார்  45 பேருடன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ள நிலையில் அவர்கள் அனைவரையும் தனிமைப்படுத்த  கொழும்பு மாநகர சபையின் மருத்துவ அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.  

இது குறித்த மேலதிக விசாரணைகளின் போது,  அந்த வயோதிப தம்பதிகளின் இரு மகன்மார் இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் செய்துவிட்டு கடந்த 14 ஆம் திகதி இலங்கை வந்துள்ளனர்.

எனினும் அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது இதுவரை உறுதியாகவில்லை. இந்நிலையில் வைத்தியர்களான பேத்திகளால் உண்மைத் தண்மை மறைக்கப்பட்டு குறித்த வயோதிபத் தம்பதி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனரா எனவும் ஆராயப்பட்டு வருவதாக கொழும்பு மாநகர சபை  மருத்துவ அதிகாரிகள் கூறினர்.

எவ்வாறாயினும் தற்போது,  அந்த தம்பதி சிகிச்சைப் பெற்ற அனைத்து வைத்தியசாலைகளிலும் அவர்களை கவனித்த பணிக் குழுவினர்கள், வைத்தியர்களையும் தனிமைப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

 நீர்கொழும்பு:


நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைத்து நீர்கொழும்பு, போரதொட்டை பகுதியைச் சேர்ந்த 64 வயதுடைய நபர் நேற்று முன் தினம் கொரோனா தொற்றால் உயிரிழந்திருந்தார். குறித்த தொற்றாளர் முதலில் நீர்கொழும்பு பகுதியில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றிலேயே அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், பின்னர் அங்கிருந்து நீர்கொழும்பு வைத்தியசலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்நிலையிலேயே நீர்கொழும்பு வைத்தியசாலையில் கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் என்டன் பெர்ணான்டோ கூறினார்.

 தொற்றாளருக்கு சுவாச பிரச்சினை இருப்பதாக கூறியே  இரு வைத்தியசாலைகளும் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

நீர்கொழும்பு வைத்தியசாலையின் 20ஆம் இலக்க அறையிலேயே அவர் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்திருந்தார். இதனையடுத்து குறித்த தொற்றாளர் அனுமதிக்கப்பட்ட வைத்தியசாலையின் சிகிச்சை அறை சீல் வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவருக்கு சிகிச்சையளிக்க முன்வந்த வைத்தியர்கள், வைத்தியசாலை பணிக் குழுவினரும்  தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
 
இதேவேளை, களுபோவில வைத்தியசாலையில்  காய்ச்சல், இருமல் தொடர்பில் அனுமதிக்கப்பட்ட தொற்றாளருக்கு கொரோனா இருப்பது உறுதியான நிலையில், அவ்வைத்தியசாலைஅயின் 5 ஆம் இலக்க சிகிச்சை அறைக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.  

குறித்த நபர் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் அவர் வெளிநாடுகளுக்கு செல்லவில்லை எனபதும் தெரியவந்துள்ளது. எனினும் கடந்த மார்ச் 12 ஆம் திகதி  ஆஸியில் இருந்து வந்த ஒருவருடன் ஒரு வேளை உணவினை அவர் உணவகம் ஒன்றில்  இணைந்து பகிர்ந்துகொண்டமை தெரியவந்துள்ளது.

எனினும் கொரோனா தொற்றுக்கான உறுதியான காரணம் தெரியவராத நிலையில், அந்நபருக்கு சிகிச்சையளித்த  வைத்தியர்கள் உள்ளிட்டோர் தனிமைபப்டுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் நோயாளர்கள், வைத்தியசாலைக்கும் வைத்தியர்களுக்கும் விடயங்களை மறைக்காது உண்மையை வெளிப்படுத்துமாறு, பொது சுகாதார அதிகாரிகள் சங்கம் பொதுமக்களிடம் கோரிக்கை முன்வைத்துள்ளது. 

Last modified on Wednesday, 01 April 2020 05:02
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd