நாட்டில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கும் அதிலிருந்து மீண்டெழுவதற்கும் முயற்சிகள் ஒருபுறம் மேற்கொள்ளப்பட்டு கொண்டிருக்கின்றது. இந்நிலையில், மறுபுறத்தில் அரசியல் சூழ்ச்சிகளும் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மிருசுவில் படுகொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ வீரர் சுனில் ரத்னாயக்கவுக்கு, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அண்மையில், விசேட பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்திருந்தார்.
அந்த விடுதலையை சிங்கள அமைப்புகள் வரவேற்றிருந்தன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டும் கடுமையாக எதிர்த்திருந்தது. ஏனைய சிங்கள கட்சிகளோ, முஸ்லிம் கட்சிகளோ, மலையக கட்சிகளோ, வாய்த்திறக்காமல் மௌனமாக இருந்துவிட்டன.
இந்நிலையில், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவை சந்தித்திருந்த, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மலிக் சமரவிக்ரம, இராணுவ வீரர் சுனில் ரத்னாயக்கவுக்கு பொதுமன்னிப்பு வழங்கியமையை கண்டிக்குமாறு கேட்டுள்ளார்.
மலிக் சமரவிக்ரம மட்டுமன்றி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏரான் விக்கிரமரத்ன, அரச சார்பற்ற நிறுவனங்களை சேர்ந்தவர்களும், சஜித் பிரேமதாஸவுக்கு கடுமையான அழுத்தங்களை கொடுத்துள்ளனர்.
இராணுவ வீரர் சுனில் ரத்னாயக்கவுக்கு விடுதலை பெற்றுக்கொடுக்கவேண்டும் என்பது மக்களின் அபிலாசையாகும். அவரது விடுதலையை விமர்சித்தால், கட்சிக்கும் அவப்பெயர் ஏற்படும். ஆகையால், நாட்டில் தற்போதைய நிலைமை, கட்சியின் எதிர்காலம், பொதுத் தேர்தல் ஆகியவற்றை கவனத்தில் கொண்டு, இந்தவிடயத்தில் வாயைத் திறக்கவேண்டாம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சஜித் பிரேமதாஸவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர்.
மலிக் சமரவிக்ரம, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு மிகவும் நெருக்கமான பள்ளி தோழன்.
இந்த சம்பவத்தை சஜித் பிரேமதாஸவின் வாயால் விமர்சனத்துக்கு உட்படுத்துவதற்கு, ரணில் விக்கிரமசிங்கவே சூழ்ச்சி செய்திருக்கலாம். அதில், மலிக் சமரவிக்ரமவை துரும்பாக பயன்படுத்தியிருக்கலாம் என்று சஜித்தின் கவனத்துக்கு சிரேஷ்ட உறுப்பினர் கொண்டுசென்றுள்ளனர். இதனால், இந்தவிவகாரத்தில் சஜித் பிரேமதாஸ மௌனமாக இருந்துவிட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.