கொரோனா வைரஸ் தொற்றை முற்றாக ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மிகத் தீவிரமாக முன்னெடுத்துவருகின்றது.
இந்நிலையில், விசேட அமைச்சரவைக் கூட்டமும் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் நடத்தப்படுகின்றது.
நேற்று (01) நடத்தப்பட்ட விசேட அமைச்சரவைக் கூட்டத்தில், பொதுத் தேர்தலில் தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டது.
பொதுத் தேர்தலில் தொடர்பிலான தீர்மானங்களை எடுக்கும் அதிகாரம், அரசியலமைப்பின் பிரகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கே உள்ளது என்று ஜனாதிபதி எடுத்துரைத்துள்ளார்.
தேர்தல் எக்காலத்தில் நடத்தப்படவேண்டும் என்பது தொடர்பிலான தீர்மானத்தை தேர்தல்கள் ஆணைக்குழுவே எடுக்கவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவியிருப்பதால், ஏப்ரல் 25ஆம் திகதியன்று தேர்தலை நடத்தமுடியாது என அறிவித்ததுடன், மறு அறிவித்தல் வரையிலும் பொதுத் தேர்தலை ஒத்திவைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.