web log free
December 22, 2024

கொரோனா பாதிப்பு- 10 இலட்சத்தை தாண்டியது

உலகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்று (கொவைட்-19) ஏற்பட்டவர்கள் எண்ணிக்கை இன்று வெள்ளிக்கிழமை 10 லட்சத்தை தாண்டியது. மொத்தமாக உலக அளவில் 10 லட்சத்து 15 ஆயிரத்து 667 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.உலக அளவில் 53 ஆயிரத்து 201 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவில் 2 லட்சத்து 45 ஆயிரத்து 80 பேர் பாதிக்கப்பட்டு 6 ஆயிரத்து 75பேர் உயிரிழந்துள்ளனர்.இத்தாலியில் இதுவரை 13 ஆயிரத்து 915 பெரும் ஸ்பெயினில் 10 ஆயிரத்து 348 பெரும் உயிரிழந்துள்ளனர்.

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உருவாகி, உலகம் முழுவதும் 216 நாடுகளுக்குப் பரவியுள்ள கொரோனா நோய்த்தொற்று லட்சக்கணக்கானோருக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், அந்த நோய்த்தொற்று காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் 53ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

கொரோனா நோய்த்தொற்று உயிரிழப்புகளில் இத்தாலிக்கு அடுத்தபடியாக உள்ள ஸ்பெயினில் நேற்று 961 பேர் அந்த நோய்க்கு பலியானதைத் தொடர்ந்து சர்வதேச உயிரிழப்பு எண்ணிக்கை அதிக அளவில் உயா்ந்ததாகக் கூறப்படுகிறது.

இத்தாலி, ஸ்பெயின் உள்பட ஐரோப்பிய நாடுகளில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை வியாழக்கிழமை 47 ஆயிரத்தைக் கடந்தது. மேலும், அந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் ஐரோப்பிய நாடுகளில் 5 லட்சத்தைத் தாண்டியது.

கடந்த 5 வாரங்களில் கொரோனா நோய்த்தொற்றும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் வேகமாக அதிகரித்து வருவதாகத் தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம், இன்னும் சில நாள்களில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை சா்வதேச அளவில் மேலும் அதிகரிக்கலாம் என்று கூறினார்.

ஐரோப்பிய நாடுகளைப் பொறுத்தவரை, பிரிட்டனும், பிரான்ஸும் கடந்த புதன்கிழமை அதிகபட்ச கொரோனா உயிரிழப்புகளைச் சந்தித்தன.

அமெரிக்காவில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளதால் அந்த நாட்டில் 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வேலையிழந்ததாக பதிவு செய்துள்ளனா். இது, அந்த நாட்டில் இதுவரை இல்லாத மிகப் பெரிய எண்ணிக்கையாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீனாவில், ‘கொரோனா’ தொற்று பெரும் அளவில் கட்டுக்குள் வந்துவிட்ட நிலையில், எந்தவித அறிகுறியும் இல்லாமலேயே, 1,300 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை மக்கள் மத்தியில் மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

சீனாவில் பரவத்துவங்கிய கொரோனா வைரஸ் தொற்று பெரும் அளவில் கட்டுக்குள் வந்துவிட்ட நிலையில், வெளிநாட்டில் இருந்து சீனா வந்த 35 பேருக்கு, கொரோனா தொற்று, நேற்று முன் தினம் உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம், வெளிநாட்டில் இருந்து, கொரோனா தொற்றுடன் சீனா வந்தவர்களின் எண்ணிக்கை, 841 ஆக உயர்ந்தது.

இதற்கிடையே, எந்தவித அறிகுறியும் இல்லாமலேயே, சிலருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஹுபய் மாகாணத்தில், நேற்று முன்தினம், 37 பேருக்கு, தொற்று உறுதியானது. இவர்கள் அனைவருக்கும், கொரோனா அறிகுறிகள் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி அறிகுறிகள் இல்லாமலேயே, தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை, 1,300 ஆக உயர்ந்துள்ளது. இது, சீன மக்கள் இடையே, பீதியை ஏற்படுத்தி உள்ளது.

அறிகுறிகள் இல்லாவிட்டாலும், அவர்களிடம் இருந்தும், தொற்று வேகமாக பரவும் அபாயம் இருப்பதால், அவர்கள் அனைவரையும், 14 நாட்கள், கட்டாயமாக தனிமைப்படுத்த, சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

கொரோனா வைரஸ், விலங்குகளிடம் இருந்து, மனிதர்களுக்கு பரவியதாக, சீன ஆராய்ச்சியாளர்கள் கூறியதை அடுத்து, நாய் மற்றும் பூனை உள்ளிட்ட பிராணிகளை சாப்பிட தடை விதித்து, சீனாவின் ஷென்ஸென் நகர நிர்வாகம், உத்தரவிட்டுள்ளது.

ட்ரம்ப்பிற்கு மீண்டும் கொரோனா பரிசோதனை

சீனாவில் துவங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த மார்ச் முதல் வாரம் அமெரிக்காவிலும் பரவியது. அப்போது பேட்டியளித்த ஜனாதிபதி ட்ரம்ப் ,கொரோனா பற்றி அமெரிக்கர்கள் கவலைப்பட வேண்டியதில்லை . எனினும் அனைத்து அமெரிக்கர்களுக்கும் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். நானும் உடல் பரிசோதனை செய்து கொண்டேன் என்றார்.

பின்னர் ட்ரம்ப்பிற்கு கொரோனா தொற்று இல்லை என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்
இந்நிலையில் பேட்டியளித்த டிரம்ப், இரண்டாவது முறையாக நான் கொரோனா பரிசோதனை செய்து கொண்டேன். 15 நிமிடத்தில் முடிவு வெளியானது. அதில் எனக்கு கொரோனா பாதிப்பு இல்லை என தெரிந்து கொண்டேன் என்றார்.

எச்சரிக்கை !

கொரோனா நோய்த்தொற்று (கொவைட்-19) பாதிப்பு காரணமாக உலகப் பொருளாதாரத்தின் வளர்ச்சி 0.9 சதவீதமாகக் குறையும் அபாயம் உள்ளதாக ஐ.நா. எச்சரித்துள்ளது.

மேலும், அந்த நோய் பரவுவதைத் தடுப்பதற்காக உலக நாடுகள் அமுல்படுத்தியுள்ள ஊரடங்கு தொடருமானால், இந்த வளர்ச்சி மேலும் வீழ்ச்சியடையும் என்று அந்த அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பொருளாதாரர மற்றும் சமூக விவகாரங்களுக்கான ஐ.நா. பிரிவு (டிஇஎஸ்ஏ) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கொரோனா நோய்த்தொற்று அச்சம் காரணமாக, உலகில் சுமார் 100 நாடுகள் கடந்த சில வாரங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளன. இதன் காரணமாக, சர்வதேச வர்த்தகம் பதிக்கப்பட்டுள்ளது; வர்த்தகப் பொருள்களுக்கான விநியோக வழித்தடங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.

பொதுமக்கள் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் சுற்றுலாத் துறை முழுமையாக முடங்கியுள்ளது.

ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள நாடுகளில் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழக்கும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளனர்.

தங்களது பொருளாதாரம் சரிவதைத் தவிர்க்க நாடுகள் மிகப் பெரிய நிதிச் சலுகை திட்டங்களை அறிவித்து வருகின்றன. இதன் காரணமாக, உலகப் பொருளாதாரம் வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

இத்தகைய சூழலில், சர்வதேச பொருளாதார வளர்ச்சி 2020-ஆம் ஆண்டில் 0.9 சதவீதமாகக் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கடந்த 2009-ஆம் ஆண்டில் சர்வதேச பொருளாதார மந்தநிலை ஏற்பட்டபோது, உலகப் பொருளாதார வளர்ச்சி 1.7 சதவீதமாக இருந்தது. ஆனால், கொரோனா நோய்த்தொற்று பாதிப்பால் ஏற்படக்கூடிய பொருளாதார மந்தநிலை காரணமாக மிகப் பெரிய வீழ்ச்சியடையும் என்று அஞ்சப்படுகிறது.

நாடுகளில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டால், பொருளாதார வளர்ச்சி 0.9 சதவீதத்தையும் விட குறையக்கூடும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா நோய்த்தொற்று பரவலுக்கு முன்னதாக, 2020-ஆம் ஆண்டில் உலகப் பொருளாதார வளர்ச்சி 2.5 சதவீதமாக இருக்கும் என்று டிஇஎஸ்ஏ அமைப்பு கணித்திருந்தது நினைவுகூரத்தக்கது.

சீனாவின் ஹூபே மாகாணம், வூஹான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் முதலாகப் பரவத் தொடங்கிய கொரோனா நோய்த்தொற்று, வியாழக்கிழமை மாலை நிலவரப்படி உலகின் 216 நாடுகளில் 10 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு பரவியுள்ளது. மேலும் அந்த நோய் பாதிப்பால் 53 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்தனர் .

அதையடுத்து, அதிகம் பாதிக்கப்பட்டுள்ள இத்தாலி, அமெரிக்கா போன்ற நாடுகள் மட்டுமன்றி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இலங்கை இந்தியா போன்ற நாடுகளும் ஊரடங்கை அமுல்படுத்தியுள்ளன.

இதன் காரணமாக, உலக மக்களில் சுமார் பாதி பேர் தங்கள் வீடுகளில் முடங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நிறுவனங்களும், சிறு தொழில்களும் முடக்கப்பட்டுள்ளதால் பலர் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்தச் சூழலில், ஐ.நா.வின் டிஇஎஸ்ஏ அமைப்பு இவ்வாறு தெரிவித்துள்ளது

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd