ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் ஆகியோர் முன்வைத்த யோசனை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான தரப்பினாரால் நிராகரிக்கப்பட்டது.
அலரிமாளிக்கையில் நடைபெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் போது, பாராளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு இவ்விருவரும் கோரிக்கையை முன்வைத்தனர்.
எனினும், பாராளுமன்றத்தை கூட்டவேண்டிய தேவையில்லை. அவ்வாறு கூட்டினால், அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்க்கட்சிகள் கொண்டுவந்து, அதனை நிறைவேற்றுவதற்கு எதிர்பார்க்கின்றன என, அமைச்சர் விமல் வீரவன்ச, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான உதய கம்பன்பில, விஜயதாஸ ராஜபக்ஷ ஆகியோர் முன்வைத்தனர்.
அதனையடுத்து ஹக்கீம், சுமந்திரனின் யோசனை தொடர்பில் எவ்விதமான கவனமும் செலுத்தப்படவில்லை.
இந்நிலையில், அரசாங்கத்துக்கு தேவையான நிதியை ஒதுக்கிக்கொள்வதற்காக, பாராளுமன்றத்தை கூட்டுமாறும், அதற்கு தேவையான ஒத்துழைப்பை நல்குவதற்கு, தாம் தயாரென ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ கோரிக்கை முன்வைத்திருந்தார்.
அந்த கோரிக்கையையும் மஹிந்த ராஜபக்ஷ தரப்பினர் தங்களது காதுகளில் போட்டுக்கொள்ளவில்லை.