இரவிலும் பகல் நேரங்களிலும் வீடுகளுக்குள்ளே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கும் நிலையில், இரவில் பலரும் வீடுகளுக்கு வெளியில், பிரதான வீதிகளிலும் தொடர்மாடி குடியிருப்புகளிலும் சுற்றி திரிகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஊரடங்குச் சட்டத்தை மீறி கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் உள்ள தொடர்மாடி வீடுகளில் இரவு நேரங்களில் சுற்றி திரியும் நபர்கள் மற்றும் ஒன்று கூடும் நபர்களை கைது செய்ய புதிய திட்டமொன்று இன்று முதல் மேற்கொள்ளப்படவுள்ளது.
அந்த வகையில் இன்று முதல் புலனாய்வுப் பிரிவினரை கடமையில் ஈடுபடுத்த உள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
இரவு நேரங்களில் சிலர் இந்த தொடர்மாடி வீடமைப்பு தொகுதிகளில் தங்கியிருப்பதாகவும், மேலும் சிலர் அங்கு கூடுவதாகவும் கிடைத்த தகவலை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை மதித்து, வெளியில் ஒன்று கூடாது வீடுகளில் இருக்குமாறு மக்களிடம் கோரிக்கை விடுக்கின்றோம்.
அதேவேளை நாட்டில் காணப்படும் நிலைமையில், சுகவீனமடையும் விலங்குகளுக்கு சிகிச்சை அளிக்க செல்லும் கால்நடை மருத்துவர்கள், தமது தேசிய அடையாள அட்டை அல்லது நிறுவனத்தின் அடையாள அட்டையை ஊரடங்குச் சட்ட அனுமதிப் பத்திரமாக பயன்படுத்த முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.