ஓகஸ்ட் மாதம் முதல் வாரத்தை தாண்டினால் மாகாணசபை தேர்தலை தேர்தலை நடத்துவது சிரமமாகும் என, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இதனைக் கூறினார்.
அவர் தொடர்ந்து கூறுகையில், “அரசியலமைப்பின்படி எமது நாட்டில் மாகாண சபை காணப்படுமாக இருந்தால் அது இருக்கும் வரை உறுப்பினர்களை நியமிக்க வேண்டுமென்றால் தேர்தலை நடத்துவது முக்கியமாகும். தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் என்ற ரீதியில் என்மீது குறைகூறுவது தொடர்பில் வெளியில் வரவேண்டுமல்லவா?
எனினும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கோ தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கோ தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்க முடியாது. நாடாளுமன்றத்தில் உள்ள 225 உறுப்பினர்களுக்கும் அமைச்சரவைக்கும் தான் சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு தேர்தலை நடத்த முடியும். தற்போது உள்ள சட்டத்தினை
நடைமுறைப்படுத்த முடியாத நிலை காணப்படுகின்றது.
அவ்வாறான நிலையில்தான் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி முதல் டிசெம்பர் 15ஆம் திகதி வரை காணப்பட்ட அரசாங்கம் தேர்தல் முறையை மாற்ற வேண்டும் என,அமைச்சரவை பத்திரத்தை தாக்கல் செய்தது. தற்போதும் அமைச்சரவை பத்திரமொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு தேர்தலை நடத்த முடியுமென்றால் அமைச்சரைவை பத்திரம் தாக்கல் செய்ய தேவையில்லையே.
அரசியல்வாதிகள் தேர்தல்கள் ஆணைக்குழுவால் தேர்தலை நடத்த முடியும் என்று கூறினாலும், அவர்கள் அனைவருக்கும் அது நாடாளுமன்றத்தில் மேற்கொள்ளவேண்டிய விடயம் என்பது தெரியும். நாடாளுமன்றத்தில் அதனை செய்யுவரை நாங்கள் பார்த்துக்கொண்டிருக்கின்றோம்.
சர்வதேச ஜனநாயக தினம் செப்டெம்பர் மாதம் கொண்டாடப்படவுள்ள நிலையில் அதற்கு முன்னதாக தேர்தல் நடத்தப்படும் என நாங்கள் நினைக்கின்றோம். மே மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் தேர்தலை நடத்துமாறு ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார்
அவ்வாறு மே மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் தேர்தலை நடத்துவது என்றால் இன்று முதல் அதற்கான நடவடிக்கைகளை உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் முன்னெடுக்க வேண்டும்.
ஓகஸ்ட் முதல் வாரத்தை தாண்டினால் தேர்தலை நடத்துவது சிரமமாகும் என்பதுதான் எங்கள் கருத்து. ஏன் என்றால் ஜனாதிபதி தேர்தலுக்கு ஓகஸ்ட் மாதம் முதல் தயாராக வேண்டும். மே மாதம் இறுதியில் அல்லது ஜீன் மாத ஆரம்பத்தில் மாகாணசபை தேர்தல்கள் நடத்தப்படும் என, நாங்கள் எதிர்ப்பார்க்கின்றோம்” என்றார்.