பேருவளை-பன்னில பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டு, சிவப்பு அபாய பிரதேசமாக அறிவிக்கப்பட்ட பிரதேசத்தில் மறைந்திருந்த 28 வயதுடைய கர்ப்பிணி, சிசுவொன்றை பிரசவித்துள்ளார்.
அந்த தாய் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்துள்ளார் என்பதால், தாயும் சேயும் வைத்தியசாலையிலேயே தனிமைப்பத்தப்பட்டுள்ளனர்.
அந்த தாய், களுத்துறை- நாகொட வைத்தியசாலையில், இன்று (04) சிசுவை பிரசவித்துள்ளார் என்று பேருவளை சுகாதார வைத்திய அதிகாரி வருண செனவிரத்ன தெரிவித்தார்.
அந்த கர்ப்பிணி தாய், தனது விலாசத்தை மாற்றிக்கூறியே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எனினும், அவரது கிளினிக் அட்டையை பார்த்தபோது, இப்பெண் பேருவளை-பன்னில பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, பெண்ணின் இரத்த மாதிரியை சோதனை செய்தபோது, அப்பெண்ணுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த பெண் பிரசவித்த சிசுவின் நிலை குறித்து வைத்தியர்கள் பரிசோதனை மேற்கொண்டு வருவதுடன், தாயையும் சிசுவையும் தனிமைப்படுத்தியுள்ளனரெனத் தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து, பேருவளையில் இதுவரை இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது.