கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அதிகளவில் இனங்காணப்பட்ட மாவட்டங்கள் சிலவற்றை தவிர, பெரும்பாலான மாவட்டங்களில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது.
தமிழ்-சிங்கள புத்தாண்டு நிறைவடைந்தன் பின்னர் அச்சமில்லாத மாவட்டங்களில், ஊரடங்கு சட்டம் உள்ளிட்ட இன்னும் சில வரையறைகளை நீக்கமுடியும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
கொரோனா தொற்று மென்மேலும் பரவாமல் இருப்பதற்காக, முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டத்தின் முன்னேற்ற மீளாய்வு தொடர்பில், ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (4) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே மேற்கண்டவாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றை அழிப்பதற்கான வேலைத்திட்டங்களை புத்தாண்டு நிறைவடையும் வரையிலும் முறையாக முன்னெடுப்பது என்றும், அதன் பின்னர், நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்து. அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கும் அரசாங்கம், இந்த கூட்டத்தில் தீர்மானித்துள்ளது.
இதேவேளை, தொற்றுநோய் தொடர்பில் கண்காணிப்புகளை மேற்கொள்ளும் உலக சுகாதார ஸ்தாபனம், அவ்வப்போது வழங்கும் பரிந்துரைகளை, ஆய்வுக்கு உட்படுத்தி தேவைக்கு ஏற்ப, தற்போது முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களுடன் சேர்த்து கொள்வதற்கும் இதன்போது இணக்கம் காணப்பட்டுள்ளது.