கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவலில் இருந்து நாட்டினையும் மக்களையும் பாதுகாக்க அரசாங்கம் துரித வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். மக்களுக்கான நிவாரணங்களை, மருத்துவ வசதிகளை செய்துகொடுக்க வேண்டியதை ஜனாதிபதி கவனத்தில் கொள்ள வேண்டும் என முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிடம் எடுத்துரைத்துள்ளார். நாட்டில் பல்வேறு மத, கலாசார தன்மைகள் இருக்கின்றன. இவற்றை மதிப்பளித்து அதேவேளையில் கொரோனா ஒழிப்பு நடவடிக்கையில் அவை எந்த விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் நிபுணர்களின் ஆலோசனைகளை பெற்று செயற்பட வேண்டும் என்ற காரணியையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டின் தற்போதுள்ள நெருக்கடிகால நிலைமைகளில் நிலைமைகளை எவ்வாறு கையாள்வது என்ற காரணிகளை ஆராயும் விதத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் கூட்டணியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோர் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்று பரவலில் இருந்து நாட்டினையும் மக்களையும் பாதுக்காக அரசாங்கம் எடுத்து வருகின்ற வேலைத்திட்டங்கள் குறித்து ஜனாதிபதி இதன்போது தெளிவுபடுத்தியுள்ளார். அத்துடன் புதுவருடம் வரையில் நாட்டில் அவசரகால சட்டத்தை முன்னெடுத்து செல்வது என்ற காரணிகளையும் தொற்றுநீக்கல் வேலைத்திட்டங்களில் அடுத்த கட்டமாக முன்னெடுக்கும் வேலைத்திட்டங்கள் குறித்தும் சில காரணிகளை ஜனாதிபதி கூறியுள்ளார். இதன்போது முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஜனாதிபதியிடம் கூறியுள்ள காரணிகளானது,
இந்த நாட்டில் தற்போது கொரோனா தொற்றுநோய் இருக்கின்றது. ஆனால் நீரிழிவு நோய், இருதய நோய், புற்றுநோய், சிறுநீரகம் போன்ற பல நோய்களில் பாதிக்கப்பட்ட இலட்சக்கணக்கான நோயாளிகள் உள்ளனர். இத்தகைய சூழலில் மருந்துகள் மற்றும் உபகரணங்கள் பற்றாக்குறை குறித்த கோரிக்கையும் புகார்களும் பல தரப்பில் இருந்து வந்துள்ளது. இந்த குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கும், இலங்கையில் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மருந்துகளின் உற்பத்தியை ஊக்குவிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கவேண்டும், அதேபோல் உலக நாடுகள் ஏதேனும் ஒரு வழிமுறையில் கொரோனாவில் இருந்து விடுபடும் மருத்துவ ஆராய்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கையும் இதிலிருந்து விடுபடக்கூடிய விதத்தில் ஆய்வுகளை முன்னெடுப்பதும் அவசியமானதாகும், இதில் உள்நாட்டு மற்றும் சர்வதேச நிபுணர்களின் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள வேண்டும்.
மேலும் நாட்டின் இப்போதுள்ள நிலையில் மக்களுக்கான உணவு உற்பத்தியை பலப்படுத்த வேண்டியது பிரதான காரணியாக அமைந்துள்ளது. அத்துடன் மருந்து பொருட்களை பெற்றுக்கொடுக்க வேண்டும். இந்த சவாலை சரியாக முன்னெடுக்கும் வேலைத்திட்டம் ஒன்று அவசியம், அதேபோல் கொரோனா வைரஸ் நோய் தாக்கத்தில் இருந்து மக்களை பாதுகாக்க சுகாதார, பாதுகாப்பு மற்றும் அத்தியாவசிய சேவைகளில் பணியாற்றும் அனைவருக்கும் உரிய பாதுகாப்பை முதலில் உறுதிப்படுத்த வேண்டும். அவர்களுக்கான உபகரணங்களை, பாதுகாப்பு கவசங்களை முறையாக பெற்றுக்கொடுக்க வேண்டும். அத்துடன் பொது சுகாதார சட்டத்தின் குறைபாடுகள் பல இருக்கின்றனர். அவற்றை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.