தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை ஊதியத்தை அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், எதிர்வரும் 05 ஆம் திகதி முக்கிய தீர்மானம் ஒன்றை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் பிரதமர் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போது அமைச்சர் பழனி திகாம்பரம் இதனை தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பெருந்தோட்டத் தொழிலாளர்களது ஊதியம் தொடர்பாக கடந்த திங்கட்கிழமை கைச்சாத்திடப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தை தற்காலிகமாக வர்த்தமானியில் பிரசுரிக்காதிருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
700 ரூபாய் என்ற நாளாந்த அடிப்படை ஊதியத்துடன் இந்த கூட்டு ஒப்பந்தம் கடந்த திங்கட்கிழமை கைச்சாத்திடப்பட்டது.
கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கம் என்பவற்றின் பிரதிநிதிகளாலும், முதலாளிமார் சம்மேளனம் மற்றும் தொழில் அமைச்சினாலும் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
தொழிலாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வகையிலான கூட்டு ஒப்பந்தம் அலரிமாளிகையில் கைச்சாத்திடப்பட்டமை மற்றும் அதன்போது பிரதமர் இருந்தமை என்பவற்றுக்கு தமிழ் முற்போக்கு கூட்டணி கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தது.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசனுடன், இணைத்தலைவர்களான அமைச்சர் பழனி திகாம்பரம், அமைச்சர் வீ. ராதாகிருஷ்ணன் ஆகியோருடன், நாடாளுமன்ற உறுப்பினர்களான ஏ.அரவிந்த்குமார், வேலுகுமார் மற்றும் எம்.திலக்ராஜ் ஆகியோர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை நேற்று சந்தித்திருந்தனர்.
இதன்போது, சர்ச்சைக்குரிய கூட்டு ஒப்பந்தத்தை தற்காலிகமாக வர்த்தமானியில் பிரசுரிக்காதிருப்பதற்கும், ஐந்தாம் திகதி மீண்டும் முதலாளிமார் சம்மேளனத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டதாக, அமைச்சர் மனோகணேசன் தெரிவித்திருந்தார்.