web log free
May 03, 2024

ஒரேநாளில் 2000 மரணம்- தடுமாறுகிறது அமெரிக்கா

கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக அமெரிக்காவில் ஒரே நாளில் 2015 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்படி, அங்கு கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,846 ஆக அதிகரித்துள்ளது.

சீனாவில் கடந்த டிசெம்பர் மாதம் அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று தற்போது, அமெரிக்காவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக உலகம் முழுவதும், 14 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 81 ஆயிரம் பேர் வரையில் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்று உருவெடுத்த சீனாவின் வுஹான் நகரம் சுமார் 11 வாரங்களின் பின்னர் நேற்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நபர்கள் அடையாளம் காணப்படுவது இல்லாத நிலையில், அங்கு கொரோனா தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

எனினும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், நாள் தோறும் அதிகளவானவர்கள் உயிரிழந்து வருகின்றனர்.

இதன்படி, அமெரிக்காவில் கொரோனா தொற்றினால் 395,000க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 12,784 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று ஒரே நாளில் அங்கு கொரோனா தொற்று காரணமாக 2015 பேர் உயிரிழந்துள்ளனர். 21 ஆயிரம் பேர் வரையில் சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியுள்ளனர்.

அதேநேரம், 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனால் அங்கு உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவில் நியூயோர்க் நகரம் கொரோனா வைரஸ் தொற்றால் நிலைகுலைந்து போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நியூயோர்க் நகரில் கொரோனா வைரஸ் தொற்றால் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.