web log free
December 22, 2024

முன்னாள் பிரதியமைச்சருக்கு தனிமை

கொரோனா வைரஸ் தொற்றியிருந்தவர் சென்றிருந்த மரண வீட்டுக்கு சென்றிருந்த முன்னாள் பிரதியமைச்சர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். 
 
மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள தாராபுரம் கிராமம் இன்று புதன் கிழமை அதிகாலை முதல் எதிர் வரும் ஒரு வாரத்திற்கு முழுமையாக முடக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.
 
கடந்த மாதம் 18 ஆம் திகதி மன்னார் தாரபுரம் கிராமத்தில் இடம் பெற்ற மரணச்சடங்கு ஒன்றில் கலந்து கொண்டு விட்டு புத்தளத்திற்குச் சென்ற ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
குறித்த நபர் நோய் ஏற்பட்டு வைத்தியசாலைக்குச் செல்லவில்லை. குறித்த நபர் கடந்த 15 ஆம் திகதி இந்தோனேசியாவில் இருந்து இலங்கைக்கு வந்திருந்தார். அதற்கு பின் 18 ஆம் திகதி மன்னார் தாரபுரம் கிராமத்திற்கு வந்து மரணச்சடங்கில் கலந்து கொண்டு பின் மீண்டும் புத்தளத்திற்குச் சென்றுள்ளார்.
 
இந்த நிலையில் குறித்த நபர் புத்தளத்தில் இரண்டு வராங்கள் தனிமைப் படுத்தப்பட்டிருந்தார். பின்னர் சமூக ரீதியில் அவருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
இதன் போது அவர் நோய் தொற்றிற்கு உள்ளாகியுள்ளமை தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் அவர்கள் உடனடியாக மன்னாரில் உள்ள உறவினர்களுக்கு அறிவித்துள்ளதோடு, பொலிஸாருக்கும் அறிவித்துள்ளனர்.
 
உடனடியாக மன்னார் பொலிஸார் மற்றும் சுகாதார துறையினரும் குறித்த கிராமத்திற்குச் சென்று தாராபுரம் கிராமத்தில் உள்ள இரண்டு கிராம அலுவலகர் பிரிவுகளையும் எதிர்வரும் ஒரு வாரத்திற்கு முடக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், அந்த மரண வீட்டுக்கு சென்று திரும்பிய முன்னாள் பிரதியமைச்சர் காதர் மஸ்தான், சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd