வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பி தலைமறைவாகியிருக்கும் 49பேர் தொடர்பிலான தகவல்களை, அரச புலனாய்வு துறை, குற்றப்புலனாய்வு பிரிவுக்கு வழங்கியுள்ளது.
இதனடிப்படையில் அவர்களை தேடும் நடவடிக்கைகளை சி.ஐ.டியினர் முன்னெடுத்துள்ளனர் என பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பில, சகல பிரதி பொலிஸ் மா அதிபர்களுக்கும், பதில் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்கிரமரத்ன பணித்துள்ளார்.
கட்டார், இந்தோனேசியா, ஜோர்தான், சோமாலியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளிலிருந்து நாடு திரும்பியவர்களே, தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு செல்லாமலும் தங்களை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தி கொள்ளாமலும் தலைமறைவாகியுள்ளனர் என அந்த தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தலைமறைவாகி உள்ளவர்கள், அக்கறைப்பற்று, பொத்துவில், இராஜகிரிய, அக்குறணை, பதுளை, சிலாபம், திஹாரிய, புத்தளம், பேருவளை, மக்கோண, முந்தல், கிரேன்பாஸ், மாத்தளை, ரிதிகம, கெக்கிராவ, வெல்லம்பிட்டிய, தும்மலசூரிய, திக்வெல, கொலன்னாவ, மீ-எல்ல ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் ஆவர்.
அந்த 49 பேரும் நாட்டுக்கு திரும்பிய நாள், அவர்களின் தொலைபேசி இலக்கங்கள், விலாசம், உள்ளிட்டவை தொடர்பிலான முழுமையான விவரம், அரச புலனாய்வு துறையினரால், சி.ஐ.டியினருக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் அவ்வாறானவர்களை 24 மணிநேரத்துக்குள் கைது செய்து, தனிமைப்படுத்தவேண்டும் என்றும் பதில் பொலிஸ் மா அதிபர் பணித்துள்ளார்.