web log free
May 09, 2025

இராணுவத்தால் ஆள முடியாது- சு.க

“நாட்டை ஆள்வதற்கு இராணுவம் போதும் என்ற கருத்தை ஏற்கமுடியாது. ஜனநாயகம் வலுப்பெறவேண்டுமெனில் நாடாளுமன்றக் கட்டமைப்பு இருக்க வேண்டும். பொதுத்தேர்தல் நடத்தப்பட வேண்டும்."

இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

கொரோனா விவகாரம் உட்பட சமகால நிலவரம் தொடர்பில் முகநூல் வாயிலாக இடம்பெற்ற நேரலையில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

“கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தி மக்களை பாதுகாப்பதற்காக அரசு துரிதமாகச் செயற்பட்டுள்ளது என்றே கூறவேண்டும்.

ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரச கட்டமைப்புக்கு முதலில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் அனர்த்த முகாமைத்துவம் என்பது இங்கு சிறந்த மட்டத்தில் உள்ளது.

கொரோனாவின் சவாலை எதிர்கொள்வதற்கு 20 இற்கும் மேற்பட்ட வைத்தியசாலைகள் தயார் நிலையில் உள்ளன. 11 வைத்தியசாலைகளில் பீ.சீ.ஆர். பரிசோதனையை மேற்கொள்வதற்கான வசதி இருக்கின்றது.

2 ஆயிரம் பேருக்கு எந்த நேரத்திலும் சிகிச்சையளிக்கக்கூடிய வகையில் சுகாதாரப் பொறிமுறை உருவாக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா, ஸ்பெனியில் உள்ளிட்ட நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் நாளாந்த பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை குறைந்த மட்டத்திலேயே இருக்கின்றது.

வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கு முன்னெடுப்பட்ட நடவடிக்கைகளே இதற்குக் காரணமாகும்.

அதேவேளை, ஏற்றுமதி வர்த்தகம், சுற்றுலாத்துறை ஆகியன பாதிக்கப்பட்டுள்ளதால் எதிர்காலத்தில் பொருளாதார ரீதியில் பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கவேண்டிய நிலை ஏற்படும்.

ரூபாவின் பெறுமதியும் வீழச்சி கண்டுள்ளது. எனவே, புதிய வழிமுறைகளைத் தேடவேண்டும். ஜனநாயகம் பக்கமும் கவனம் செலுத்த வேண்டும்.

ஏப்ரல் 25 பொதுத்தேர்தல் நடைபெறவிருந்தது. எனினும், தற்போதைய சூழ்நிலையில் அது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாடாளுமன்றம் தேவையில்லை, 20, 25 மேஜர் ஜெனரல்களும், பிரிகேடியர்களும் இருந்தால் நாட்டை ஆளலாம்.

பொதுத்தேர்தல் தேவையில்லை என சமூகவலைத்தளங்களில் கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருன்றன. ஆனால், ஜனநாயகத்தை மதிக்கும் நாடு என்ற அடிப்படையில் எம்மால் நாடாளுமன்ற சம்பிரதாயத்தை மீறிச் செய்யமுடியாது.

எனவே, கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்காக தேசிய வேலைத்திட்டம், நிவாரணத் திட்டம், பொருளாதாரத்தை மீட்டெடுத்தல், ஜனநாயகத்தைப் பலப்படுத்தல் போன்ற காரணிகள் தொடர்பிலும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கவனம் செலுத்த வேண்டும்" - என்றார்.

Last modified on Friday, 10 April 2020 01:16
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd