எதிர்வரும் மே 23ஆம் திகதி பொதுத்தேர்தலை நடத்தலாம் என அரசு உத்தேசமாகத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அன்றைய தினத்தில் தேர்தலை நடத்தினால், அரசமைப்பு மீறல் எதுவுமில்லாமல் ஜூன் தொடக்கத்தில் நாடாளுமன்றக் கலைப்பு வர்த்தமானியில் குறிப்பிட்டதைப்போல் புதிய நாடாளுமன்ற அமர்வை கூட்டலாம் என்று அரசு திட்டமிட்டுள்ளது.
கொரோனா அச்சுத்தலால் நாடாளுமன்றத் தேர்தலைப் பிற்போட வேண்டும் எனப் பெரும்பாலான அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. எனினும், அரச தரப்பினர் உடனடியாகத் தேர்தலை நடத்தி முடிப்பதில் விடாப்பிடியாக உள்ளனர்.
கொரோனாவினால் நாடு மூடப்பட்டுள்ள நிலையில், உடனடியாகத் தேர்தலை நடத்துவது சாத்தியமில்லை எனத் தேர்தல்கள் ஆணைக்குழு கருதுகின்றது. நாடாளுமன்றத்தைக் கலைக்கும் ஜனாதிபதியின் வர்த்தமானியில் புதிய நாடாளுமன்றம் எதிர்வரும் ஜூன் மாதம் 2ஆம் திகதி கூடும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், தேர்தல் வேட்புமனுத் தாக்கல் செய்யும் காலத்திலேயே கொரோனா தொற்று ஏற்பட்டது. அப்போதே நாட்டை முற்றாக முடக்கும்படி சில தரப்புக்கள் வலியுறுத்தி வந்தபோதும், வேட்புமனுக் காலம் முடியும் வரை நாடு முடக்கம் அறிவிக்கப்படவில்லை என அண்மையில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் பகிரங்கமாக விமர்சித்திருந்தார். இந்த அபிப்பிராயம் வேறும் சில தரப்பிடமும் உள்ளது.