உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சட்டத்தரணி ஹெஜாஸ் ஹிஸ்புல்லாஹ் , எப்போதும் நாட்டுக்கெதிராக அல்லது தீவிரவாத செயற்பாடுகளுடன் தொடர்புகளை கொண்டிராதவர் என்று அவரது குடும்ப உறுப்பினர்கள் விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ளனர்.
பல்வேறு தரப்பினர் சார்பில் அவர் சட்டத்தரணியாக செயற்பட்டுள்ளாரென குறிப்பிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில் , பொலிஸாரின் விசாரணைகளுக்கு அவர் முழு அளவில் ஒத்துழைப்பை வழங்குவாரென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா புத்தளம் பிரதேசத்தில் வைத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டார்.
இந்த சட்டத்தரணி முன்னாள் அமைச்சர் றிசார்ட் பதியூதீன் சம்பந்தப்பட்ட வழக்குகளில் மாத்திரமல்லாது, பெரும் பரப்பரப்பை ஏற்படுத்திய மருத்துவர் ஷாபி தொடர்பான வழக்கிலும் ஆஜராகி வாதாடி வந்தவர்.
மேலும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவி வகித்த போது நாடாளுமன்றத்தை கலைத்து வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினரான பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் தாக்கல் செய்திருந்த மனுவின் சார்பிலும் இவர் ஆஜராகி வாதாடியிருந்தார்.