இலங்கை, பங்களாதேஷ், பூட்டான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு உதவும் வகையில் இந்திய இராணுவம் தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, குறித்த நாடுகளுக்கு தனி அணிகளை அனுப்பி உதவுவதற்கு இந்திய இராணுவம் தயாராகி வருவதாக அந்நாட்டு ஊடகங்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.
கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், கொரோனா வைரஸ் பரவலை கையாள்வதற்கான திறன்களை அதிகரிக்க அந்த நாடுகளுக்கு உதவுவதற்கு இந்திய இராணுவம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கொரோனா வைரஸ் பரிசோதனை ஆய்வகங்களை அமைக்கவும், உள்ளூர் மருத்துவ நிபுணர்களுக்கு தொற்றுநோயை எதிர்த்து போராடவும் உதவுவதற்காக 14 பேர் கொண்ட இந்திய இராணுவ குழு கடந்த மாதம் மாலைதீவுக்கு அனுப்பப்பட்டது.
அத்துடன், இந்த மாத ஆரம்பத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக இந்தியா 15 பேர் கொண்ட இராணுவக் குழுவை குவைத்துக்கு அனுப்பியது.
இந்நிலையிலேயே, தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கு பிராந்தியத்தில் உள்ள அனைத்து நட்பு நாடுகளுக்கும் உதவி வழங்குவதற்கான இந்தியாவின் கொள்கையின் ஒரு பகுதியாக இலங்கை, பங்களாதேஷ், பூட்டான் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கான அணிகள் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த மார்ச் 15ம் திகதி இடம்பெற்றிருந்த ஒரு காணொளி மாநாட்டில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சார்க் பிராந்தியத்தில் COVID-19 ஐ எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு கூட்டு மூலோபாயத்தை வகுத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது