முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசியல் எதிர்காலம் நிச்சயமற்ற நிலைமையில் இருப்பதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈஸ்டர் தாக்குதலின் முதலாம் ஆண்டு நினைவு தினம் நேற்று முன்தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
இந்த தாக்குதல் தொடர்பாக கருத்து வெளியிட்டிருந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றை தவிர்ந்த ஏனைய அனைத்து தரப்பினரும், முன்னாள் ஜனாதிபதி இந்த தாக்குதல் குறித்து அறிந்தும் அதனை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சுமத்தியிருந்தனர்.
அப்போது நாட்டின் முப்படை தளபதியாக இருந்தவருக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த வேண்டும் என கொழும்பு பேராயர் வணக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் மிகத் தெளிவாக கூறியிருந்தார்.
அது மாத்திரமல்லாது மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கத்தில் அமைச்சராக பதவி வகித்த சம்பிக்க ரணவக்க, ஊடக சந்திப்பொன்றை நடத்தியிருந்ததுடன், ஈஸ்டர் தாக்குதலுக்கு முன்னாள் ஜனாதிபதி மட்டுமல்ல முன்னாள் பிரதமரும் பொறுப்புக் கூற வேண்டும் எனக் கூறியிருந்தார்.
எவ்வாறாயினும் இந்த தாக்குதல் தொடர்பாக தனக்கு எவ்வித முன்னறிவிப்பும் செய்யப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி கூறினாலும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த தாக்குதல் தொடர்பாக அறிந்திருந்தார் என முன்னாள் பொலிஸ் மா அதிபர் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோர் கூறியுள்ளனர்.
இவ்வாறான நிலைமையில் எதிர்வரும் பொதுத்தேர்தலில் மைத்திரிபால சிறிசேன கடும் விமர்சனங்களை மாத்திரமல்லாது பிரச்சினைகளையும் எதிர்நோக்க நேரிடும் என அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.