நாடாளுமன்றத்தை கலைத்து, மார்ச் 2ஆம் திகதியன்று வெளியிடப்பட்டிருந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் காலவதியாகிவிட்டதெனத் தெரிவித்துள்ள முன்னாள் சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்ல, ஆகையால், நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார் என ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கலைத்தமைக்கான அதிகாரம் செயலிழந்துவிட்டது என்பதனால், நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதற்கான அதிகாரம் சபாநாயகருக்கு கிடைத்துள்ளதென அவர் தெரிவித்துள்ளார்.
ஊடங்கங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையொன்றிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தைக் கலைத்து, பொதுத் தேர்தலுக்கான திகதி, ஏப்ரல் 25 என ஏற்கெனவே குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும், அந்தத் தீர்மானத்தில் திருத்தம் செய்யப்பட்டு, பொதுத் தேர்தலுக்கான திகதியாக ஜூன் 20ஆம் திகதி குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகையால், நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான அறிவிப்பு செயலிழந்துவிட்டது.
நாடாளுமன்றம் கூட்டப்பட்டதன் பின்னர், எதிர்க்கட்சி என்ற வகையில், நாட்டுக்காக தங்களுடைய அர்ப்பணிப்பை செயற்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கு தேவையான நிதி ஒதுக்கீடுகள், சட்டங்களை நிறைவேற்றிக்கொள்வதற்கு ஒத்துழைப்பு நல்குவோமென, அவ்வறிக்கையில் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
2019 ஒக்டோபர் மாதம், அன்றிருந்த ஜனாதிபதி, சட்டவிரோதமான முறையில் நாடாளுமன்றத்தை கலைத்தார். எனினும், சபாநாயகர் தன்னுடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார். நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை ஏற்கவில்லை என்பதால், நல்லாட்சி அரசாங்கத்துக்கு தன்னுடைய ஆட்சியை தொடரமுடிந்து என்றும் அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளார்.