கடந்த 6 நாட்களாக முன்னெடுத்து வந்த சட்டப்படி வேலை செய்யும் போராட்டம் நேற்று இரவுடன் கைவிடப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் சங்க தலைவர் உதித்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
சுங்க திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றிய பி.எஸ்.எம் சார்ள்ஸை மீண்டும் அந்த பதவிக்கு நியமிப்பதாக நிதியமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்ததை அடுத்து, இந்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.
பி.எஸ்.எம் சார்ள்ஸை அந்த பதவியில் இருந்து நீக்குவதற்காக நிதியமைச்சர் மங்கள சமரவீர முன்வைத்த அமைச்சரவை பத்திரம் நேற்றைய தினம் வாபஸ் பெற்றுக் கொள்ளப்பட்டது.
இதற்கமைய சுங்க பணிப்பாளர் நாயகம் பதவியிலிருந்து நீக்கப்பட்ட பி.எஸ்.எம் சார்ள்ஸை மீண்டும் மூன்று மாதகாலப்பகுதிக்காக நியமிக்க அமைச்சரவை அனுமதி கிடைக்க பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.