web log free
December 22, 2024

பாடசாலையை கைப்பற்றியது இராணுவம்

கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தல் முகாமாக எந்தவொரு பாடசாலையும் கையக்கப்படுத்தப்படாது என படைத்தரப்பு ஏற்கனவே அறிவித்திருந்த போதிலும், படையினரை தங்கவைப்பதற்காக பாடசாலைகளை கையகப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

கொழும்பில், ஐந்துக்கும் மேற்பட்ட பாடசாலைகளை படையினர் கையகப்படுத்தவுள்ளனர் என தகவல்கள் வெளியாகியிருந்தன. எனினும், அதனை படைத்தரப்பு மறுத்திருந்தது. இதேபோல, வடக்கிலும் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின.

ஆனால், முல்லைத்தீவு கல்வி வலயத்திற்குட்பட்ட வற்றாப்பளை மகா வித்தியாலயம், தனிமைப்படுத்தல் முகாம் அமைப்பதற்காக மக்களின் எதிர்ப்பையும் மீறி கையகப்படுத்தப்பட்டுள்ளது.

இன்று மாலை பாடசாலை வளாகத்தின் வசதிகளை பார்வையிட்டு அங்கே விடுமுறை முடித்து முகாம்களுக்கு திரும்பும் படையினரை 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தி கண்காணிப்பதற்காக பாடசாலை வளாகத்தை பெற நடவடிக்கை மேற்கொள்வதை அறிந்த கிராம மக்கள் பாடசாலை வாயில் கதவை மறித்து படையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது குறித்த பகுதிக்கு இராணுவத்தினர், பொலிஸார், பொது சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வரவழைக்கப்பட்டு மக்களுடன் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டது.

எனினும், மக்கள் அதற்கு சம்மதிக்காத நிலையில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று கொண்டிருந்த சமயத்தில் இராணுவத்தினர் சிலர் பாடசாலை வளாகத்தில் துப்புரவு செய்வதற்குரிய பொருட்களுடன் வருகை தந்து பணிகளை மேற்கொள்ள ஆரம்பித்தனர் .

இந்த செயற்பாடுகளுக்கு மக்கள் கடுமையான எதிர்ப்புகளை வெளியிட்ட போதும் இராணுவத்தினர் 15 நாட்களுக்குள் இந்த செயற்பாடு நிறைவு பெறும் என்றும், இந்த 15 நாட்களுக்கு மாத்திரம் பாடசாலையை வழங்குவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு பல்வேறு அழுத்தங்களை பிரயோகித்தனர்.

அதன் விளைவாக மக்கள் எதிர்ப்புக்களையும் மீறி குறித்த பாடசாலை தனிமைப்படுத்தல் முகாமாக மாற்றப்பட்டுள்ளது.

Last modified on Tuesday, 28 April 2020 23:04
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd