தன்னுடைய சைக்கிளில் மண்வெட்டியையும் கட்டிக்கொண்டு, வயலுக்கு வேலைக்குச் செல்வதைப் போல, ஆடைகளை அணிந்துகொண்டு, வீடொன்றுக்கு கற்பிப்பதற்கு சென்ற தனியார் வகுப்புகளை நடத்தும் ஆசிரியர் ஒருவர், திருடரான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
தென்மாகாணத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பாடசாலைகளுக்கும் நீண்டநாள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. தனியார் வகுப்புகளையும் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மகனும் புலமைப்பரிசில் பரீட்சை எழுதவேண்டும்.
இதற்கிடையில் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ளதால், தன்னுடைய 10 வயது மகனுக்கு புலமைப்பரிசில் பரீட்சைக்கான ஆயத்தங்களை எவ்வாறு செய்வதென்று யோசித்த தாயொருவர், ஆசிரியரை வீட்டுக்கு அழைத்துள்ளார்.
ஊரடங்கு சட்டம் என்பதால், வீதிகளில் செல்லமுடியாது. எனினும், விவசாயிகளுக்கு சென்றுவரலாம்.
சரி, நான் வருகின்றேன். வயலில் வேலை செய்பவரை போல வருகின்றேன். வீட்டுக்கு வந்து,ஆடைகளை மாற்றிக்கொள்கின்றேன் என தெரிவித்துள்ளார். அதற்கு அந்த தாயும் தலையசைத்துள்ளார்.
வீட்டுக்கு வெளியே யாரும் செல்லமுடியாது என்பதால், சின்ன மகன் வீட்டு வாசலில் விளையாடிக்கொண்டிருந்துள்ளார்.
அப்போது, முகத்தை துணியால் மறைத்திருந்தவாறு சைக்கிளில் வந்த ஒருவர், வீட்டின் கேட்டை திறந்துகொண்டு மிகவேகமாக வீட்டின் பின்புறமாக பறந்துள்ளார்.
அதனை கண்ட சிறுவன், அம்மே... அம்மே... கள்ளன் கள்ளன் என கூச்சலிட்டுள்ளார்.
சிறுவனின் சத்தத்தைக் கேட்டு, அக்கம் பகத்தில் இருந்தவர்களும் வீட்டை சூழ்ந்துகொண்டனர்.
முகத்தில் கட்டியிருந்த துணியை அவிழ்த்தபோதுதான். அவர் தனியார் வகுப்புகளை நடத்தும் ஆசிரியர் என்பது தெரியவந்தது.
இனிமேல் வகுப்பு நடத்தமுடியாது. பொலிஸாருக்கு யாராவது கோல் எடுத்து சொல்லிட்டால், நாங்கள் இருவரும் மாட்டிக்கொள்வோம் எனக் கூறி, மண்வெட்டியை கட்டிக்கொண்டு, வீட்டுக்கே பறந்துவிட்டார்.