கொவிட்-19 தொற்றுத் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் 25ஆம் திகதி முதல் ஊரடங்கு அமுலில் உள்ளது.
அன்று முதல் மதுபானக் கடைகள் மூடப்பட்டு உள்ளன.
இது ஒருபுறம் இருக்க மதுக்கடை உரிமையாளர்களே, சட்டவிரோத மதுவிற்பனையில் ஈடுபட்ட சம்பவங்களும் அரங்கேறி வந்தன. மது கிடைக்காமல் திண்டாடிய மது பிரியர்கள் 4 மடங்கு விலை கொடுத்து மது குடித்தும் வந்தனர்.
மது கிடைக்காத விரக்தியில் 20க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்துகொண்டனர்.
அதுபோல் இந்தியா, கர்நாடகத்தில் தென்னை மரங்களில் இருந்து இறக்கப்படும் நீரா பானத்துக்கும் கடும் கிராக்கி ஏற்பட்டு வந்தது. இதுதவிர கள்ளச்சாராயம் விற்பனையும் படுஜோராக நடந்து வந்தது.
இதனால் கொவிட்-19 தொற்றுத் தடுப்பு பணியில் இரவு-பகலாக ஈடுபட்டு வந்த பொலிஸாருக்கு இந்த பிரச்சினை பெரும் தலைவலியைக் கொடுத்து வந்தது. மது போதைக்கு அடிமையான பலரும், கர்நாடகத்தில் மதுக்கடைகளை உடனே திறக்க
வேண்டும் என்றும் வலியுறுத்தி முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு டுவிட்டர், வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களில் வேண்டுகோளை விடுத்த வண்ணம் இருந்தனர். இதற்கிடையே கர்நாடகத்தில் கொவிட்-19 தொற்றுத் தீவிரம் குறைந்து வருகிறது.
இதனைக் கருத்தில் கொண்டு கர்நாடக அரசு, தனியார் மொத்த விற்பனை கடைகள் மற்றும் அரசின் சில்லறை விற்பனை மதுக்கடைகளை திறக்க முன்வந்துள்ளது.
அதாவது மே 4 ஆம் திகதி (இன்று) முதல் கர்நாடகத்தில் கொவிட்-19 தொற்று அதிகம் உள்ள கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப் பட்ட இடங்களை தவிர்த்து மற்ற
பகுதிகளில் மதுக்கடைகள் திறக்கப்படும் என்று கர்நாடக அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி இன்று (திங்கட்கிழமை) முதல் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை மதுக்கடைகள் திறக்கப்பட்டன.
கடந்த 39 நாள்களாக மதுக்கடைகள் மூடப்பட்டு கிடந்ததால் விரக்தியில் இருந்து வந்த மது பிரியர்கள் மதுக்கடைகள் திறக்கப்பட்டதும் சமூக இடைவெளியை காற்றில் பறக்க விட்டு விட்டு கூட்டமாக கூடினர்.
சில இடங்களில் குடிமகன்கள் பட்டாசுகளை வெடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய காட்சிகளில் சமூக வலைத்தளங்களில் பரவுகின்றன.