கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய நான்கு மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய 21 மாவட்டங்களில் இன்று அதிகாலை 5 மணிக்கு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது.
குறித்த 21 மாவட்டங்களில் இன்று இரவு 8 மணிக்கு மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. அது எதிர்வரும் 11 ஆம் திகதி வரை அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய நான்கு மாவட்டங்களில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டமானது எதிர்வரும் மே 11 ஆம் திகதி வரை தொடர்ந்தும் அமுலில் இருக்குமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக மார்ச் 20ஆம் திகதி முதல் தொடர்ச்சியாக ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், வருகின்ற நாட்களில் வெசாக் மற்றும் வார இறுதி விடுமுறை தினங்கள் வருவதினால், மக்கள் ஒன்று கூடுவதைத் தவிர்க்கும் வகையில் மீண்டும் தொடர் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 11ஆம் திகதி முதல், கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய நான்கு மாவட்டங்களில் ஊரடங்கு அமுலில் உள்ள நிலையிலேயே, அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் செயற்பாடுகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கொரோனா தடுப்பு ஜனாதிபதி செயலணி உரிய தரப்புடன் தொடர்ந்தும் கலந்துரையாடல்களை முன்னெடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட பகுதிகளில், தேசிய அடையாள அட்டையைப் பயன்படுத்தி வெளியே செல்லும் நடைமுறை எதிர்வரும் 11 ஆம் திகதியிலிருந்தே அமுலாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட பகுதிகளில், தேசிய அடையாள அட்டையைப் பயன்படுத்தி வெளியே செல்லும் நடைமுறை இந்த வாரம் முதல் அமுலாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே, இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதன்படி, 11ஆம் திகதி முதல் ஊரடங்கு அமுல்படுத்தப்படும் பகுதிகளில் தேசிய அடையாள அட்டையைப் பயன்படுத்தி வெளியே செல்லும் நடைமுறை செயற்படுத்தப்பட உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.