2019 ஏப்ரல் 21ஆம் திகதியன்று நடத்தப்பட்ட தற்கொலைத்தாக்குதலில் தற்கொலை செய்துகொண்டவர்கள், தங்களுடைய மனைவிகளுக்கும் ஏனைய சில பெண்களுக்கும் பயிற்சியளித்துள்ளமை விசாரணைகளிலிருந்து கண்டறியப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் நடத்திய பயங்கரவாத குழுவின் தலைவர் சஹ்ரான் ஹாசிம், காத்தான்குடி பாலமுனை கரபால பிரதேசத்தில் நடத்திசென்றிருந்த பெண்களுக்கான பயிற்சி முகாம் குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் கண்டறியப்பட்டது.
மாவனெல்லையில் புத்தர் சிலைகள் உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு, தடுத்துவைக்கப்பட்டிருக்கும் நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர், கிடைத்த தகவல்கள் அடிப்படையிலேயே இந்த முகாம் கண்டுப்பிடிக்கப்பட்டது.
சியாத் கார்டன் என்றழைக்கப்படும் ஹோட்டலே இவ்வாறு கண்டறியப்பட்டது. அதன்பின்னர் அங்குச் சென்ற விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார், அஹ்த ஹோட்டலின் அறைகளை முழுமையாக சோதனைக்கு உட்படுத்தினர்.
ஹோட்டல் உரிமையாளர், அந்த ஹோட்டலை இதற்கு முன்னர் சொந்தமாக வைத்திருந்தவர், உள்ளிட்டோரிடமும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன என பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
தற்கொலை செய்துகொண்டோரின் மனைவிகள் மற்றும் இன்னும் சில பெண்கள், இவ்வாறு இங்குவந்து போதனை வகுப்புகளில் பங்கேற்றுள்ளனர் என விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளதெனத் தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.