குறிப்பு- இந்த செய்தியின் தலைப்பில், “ஜனாஸாக்களை அடக்கம் செய்யாதீர்” என தவறுதலாக எழுதப்பட்டுவிட்டு. அதற்காக மனவருத்தம் தெரிவித்துகொள்கின்றோம். (தலைப்பை திருத்துவதற்கு முன்னர், டொங்கல் செயலிழந்துவிட்டது) தற்போது திருத்திவிட்டோம். இதனால் வாசகர்களுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்காக மன்னிக்கவும்.
கொரோனா தாக்கத்தால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டுமென வலியுறுத்தி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவர் ரிசாட் பதியுதீன்.
அவர் அனுப்பிய கடிதம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
பூகோளம் முழுவதிலும் கொவிட் – 19 தொற்றுநோய் காரணமாக ஏற்பட்டுள்ள சவால்களை வெற்றிகொள்வதில் நீங்கள் வழங்குகின்ற உறுதியானதும், பலமானதுமான தலைமைத்துவத்துக்கு எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றேன்.
தங்களுடைய உயிரையும் துச்சமென நினைத்து பிறரது உயிர்களை பாதுகாக்கும் ஒரேயொரு நோக்கத்தோடு, சிறந்த சேவையினை வழங்கிக்கொண்டிருக்கின்ற நமது நாட்டின் அரச ஊழியர்கள், இராணுவப் பிரிவினர் மற்றும் மருத்துவ பிரிவினர்களது அர்ப்பணிப்பான சேவையினை நாங்கள் பாராட்டுவதில் பெருமிதம் அடைகிறோம்.
எமது வேதநூலான புனித அல் – குர்ஆனில் கூறப்பட்டுள்ள குர்ஆன் வசனமானது இதனை மெய்ப்பிப்பதாக உள்ளது. அல் – குர்ஆனில் 5 வது அத்தியாயம், 32 வது வசனத்தில் கூறப்பட்டுள்ளதாவது, “எவர் ஒருவர் ஒரு ஆன்மாவை வாழ வைக்கின்றாரோ, மனிதர்கள் அனைவரையும் அவர் வாழ வைத்தவர் போன்றாகிவிடுவார்”
கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு மரணிக்கின்ற இலங்கை முஸ்லிம்களின் உடல்கள் (ஜனாஸாக்கள்) தொடர்ச்சியாக தகனம் செய்யப்படுவதால், முஸ்லிம் சமூகம் மிகுந்த மனவேதனைக்குள்ளாகியுள்ளது.
மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களே, மரணித்தவர்களினது உடல்களினை புதைக்கலாம் என்பது தொடர்பாக உங்களுக்கு கருத்து கூறுவதற்கு தேவையற்றிருந்த போதிலும், அது தொடர்பாக சில விடயங்களை முன்வைக்கலாம் என கருதுகின்றேன்.
உலகில் 180 க்கு மேற்பட்ட நாடுகளிலும் உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) 2020.03.24 இல் வெளியிட்ட, ‘கொவிட் – 19 இன் காரணமாக மரணிக்கும் உடல்களை பாதுகாப்பாக கையாள்வது தொடர்பான கட்டுப்பாடுகள் மற்றும் தடுப்பு வழிகாட்டல்களின்’ பிரகாரமும், கொரோனா தொற்றுநோய் காரணமாக மரணித்த உடல்களை புதைப்பதற்கு அனுமதி அளித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் மரணிக்கும் பல்லாயிரக்கணக்கான உடல்கள் ஐக்கிய அமெரிக்கா, பிரித்தானியா, ஸ்பெயின், சிங்கப்பூர், அவுஸ்திரேலியா மற்றும் ஹொங்கொங் போன்ற மருத்துவத் துறையில் சிறந்து விளங்குகின்ற நாடுகளில் கூட பாரிய புதைகுழிக்குள் அடக்கம் செய்வதனை சர்வதேச செய்திகள் ஊர்ஜிதப்படுத்துகின்றன.
ஆனால், எமது நாடான இலங்கையில் 2020.04.11 ஆம் திகதிய வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் அடக்கம் செய்வதற்கும் தகனம் செய்வதற்கும் முடியும் என்பதனை மாற்றி, தகனம் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருப்பதால் அடக்கம் செய்வதற்கான முஸ்லிம்களின் உரிமை தடை செய்யப்பட்டுள்ளது.
அண்மையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற கட்சித் தலைவர்களினது கூட்டத்தில் இடம்பெற்ற ஒரு விடயத்தைக் குறிப்பிட்டு கூறலாம் என நினைக்கின்றேன். அக்கூட்டத்தில் நாங்கள் மருத்துவ நிபுணர்களினைக் கொண்ட ஒரு குழுவினை நியமித்து, மரணித்த முஸ்லிம் உடல்களினை அடக்கம் செய்வது தொடர்பாக விஞ்ஞான ரீதியில் ஆய்வுக்குட்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்திருந்தோம். இவ்வாறு முஸ்லிம்களின் சமய ரீதியான உரிமையினை மதிக்கும் வகையில், நன்கு ஒழுங்குபடுத்தப்பட்டதொரு மருத்துவ நிபுணர் குழுவை ஜனாதிபதியாக நீங்கள் நியமிக்க முடியுமாக இருந்தால், முஸ்லிம் சமூகம் மிகவும் மகிழ்ச்சியடையும். இவ்வாறானதொரு குழுவை நியமிக்குமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கூட, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் எழுத்துமூலம் கோரிக்கை விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களே, மரணித்த முஸ்லிம்களின் ஜனாஸாக்களை இஸ்லாமிய மத சடங்குகளின் பிரகாரம் அப்புறப்படுத்துவது (அடக்குவது), உயிருடன் வாழ்கின்ற ஒவ்வொரு முஸ்லிமினதும் பொறுப்பாகும். இந்த அடிப்படையிலேதான் இஸ்லாமிய மார்க்கத்தில மரணித்த ஜனாஸாக்களினை அடக்கம் செய்வது பரிந்துரைக்கப்பட்டுள்ளது. எனவே, மரணித்த முஸ்லிம்களின் சடலங்களை தகனம் செய்வது, எங்களுக்கு தடை செய்யப்பட்டதொன்றாகும். அதனாலேதான் மரணித்த உடலை குளிப்பாட்டும்போது கூட, நாங்கள் மிகக் கவனமாகவும் உணர்வுபூர்வமாகவும் அக்கடமையினை செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றோம்.
நபி முஹம்மது (ஸல்) அலைஹி வஸல்லம் கூறியுள்ளதாவது, “ஒரு முஸ்லிம் மரணித்தவுடன் அவரது எலும்புகளை உடைப்பது, அவர் உயிருடன் உள்ளபோது அவ் எலும்புகளை உடைப்பதற்கு சமனாகும்” எனக் கூறினார். இந்த ஹதீஸ் உண்மையானது. மேலும், இந்த ஹதீஸில் கூறப்படுகின்ற விடயமானது முஹம்மது (நபி) அவர்களுக்கும், அவர்களது தோழர்களில் ஒருவருக்கும் கூறப்பட்டுள்ளது. ஆகையால், மரணித்த முஸ்லிம்களினது ஜனாஸாக்களை எரிப்பதற்கு எந்தவிதமான அனுமதியும் கிடையாது. நான் உட்பட அநேகமானோர் இவ்விடயம் தொடர்பாக மேன்மை தங்கிய ஜனாதிபதியாகிய உங்களினதும், அரசாங்கத்தினதும் கவனத்துக்கு, கொவிட் – 19 இன் தாக்கம் நிலவிய ஆரம்ப காலகட்டத்தில் கொண்டுவந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆனால், கொரோனா தொற்று காரணமாக மரணித்த முஸ்லிம் ஜனாஸாக்களை முஸ்லிம் சமயத் தலைவர்களினதும் மற்றும் குடும்ப உறுப்பினர்களதும் எதிர்ப்புக்கள் எவற்றையும் கருத்திலெடுக்காது, அரசாங்கம் தொடர்ச்சியாக எரியூட்டிக்கொண்டிருக்கின்றமை வேதனையளிகின்றது.
அதிமேதகு ஜனாதிபதி அவர்களே, நீங்கள் நன்கு அறிந்ததன் பிரகாரம், 2020.05.08 ஆம் திகதி மரணித்த 52 வயதுடைய, மோதரை பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம் பெண்மணியுடைய ஜனாஸா எரியூட்டப்பட்டது. குறிப்பிட்ட பெண்மணி ‘கொவிட் – 19 தொற்றுநோய்க்கு உட்பட்டவர்’ என அரச அதிகாரிகள் அறிவித்திருந்தனர். ஆனால், பின்னர் உறுதிப்படுத்தப்பட்ட சான்றுகளின் பிரகாரம், குறிப்பிட்ட பெண்மணி கொவிட் – 19 தொற்றுநோய்க்கு உட்பட்டவர் இல்லையென தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதனால், குறிப்பிட்ட வைரஸ் தொற்றுக்குள்ளான முஸ்லிம்களின் தலைவிதியினைப் பற்றி, முஸ்லிம் சமூகம் பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.
மரணித்தவர்களினது நம்பிக்கை மற்றும் மரபுகளின் படி அவர்களது உடல்களை அப்புறப்படுத்துவது, மரணித்தவர்களுக்கு செய்யக் கூடிய மிக இழிவளவிலான மரியாதையும் கௌரவமும் ஆகும். கொவிட் – 19 தொற்றுக் காரணமாக மரணிக்கும் சடலங்களை புதைப்பதனை தடை செய்து, 2020.04.11 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலானது, அறிவியல் மற்றும் நெறிமுறைகள் ரீதியாக குறைபாடுகளுடையது. முழு உலகமும் மரணித்த உடல்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்கியுள்ள போதும், இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளும் இந்தப் பாரபட்சமான நடவடிக்கைக்கு எந்தவிதமான அடிப்படைக் காரணமும் கிடையாதென நான் நம்புகின்றேன்.
எனவே, அதிமேதகு ஜனாதிபதி அவர்களே, நான் உங்களிடம் மிகப் பணிவாக வேண்டிக்கொள்வது யாதெனில், கொவிட் – 19 காரணமாக மரணிக்கும் உடல்களை அடக்கம் செய்வதும் ஓர் அனுமதிக்கப்பட்ட அப்புறப்படுத்தும் முறையாக இணைத்து, 2020.04.11 வெளியிடப்பட வர்த்தமானி அறிவித்தலில் திருத்தம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.