web log free
December 22, 2024

பிள்ளையான் வழக்கு- சாட்சிகளுக்கு அழைப்பு

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்ட ஐவருக்கு எதிரான வழக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பிலான வழக்கு இன்று (11) காலை மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது வழக்கை எதிர்வரும் ஜூலை மாதம் 27 ஆம் திகதி வரை ஒத்திவைத்து குற்றவியல் சிவில் மேல் நீதிமன்ற நீதிபதி டீ. சூசைதாசன் உத்தரவிட்டார்.

அத்துடன் வழக்கின் 1 முதல் 7 வரையான சாட்சியாளர்களை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி மன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வழக்கின் முதலாவது பிரதிவாதியான சிவநேசதுரை சந்திரகாந்தனின் விளக்கமறியல் எதிர்வரும் ஜூலை மாதம் 27 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக நீதிமன்ற நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டிருந்தமையினால் கடந்த வழக்கு விசாரணை ஸ்கைப்பினூடாக முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பில் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சித் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்த ராஜா, கஜன் மாமா எனப்படும் கனகநாயகம் மற்றும் இராணுவப் புலனாய்வு உத்தியோகத்தர் எம். கலீல், முன்னாள் இராணுவ சிப்பாயான மதுசிங்க ஆகியோர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd