web log free
September 03, 2025

மாணவனை நினைத்து வெட்கப்பட்ட சி.வி

சுமந்திரன் விடுதலைப் புலிகளை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், தம்பி பிரபாகரனால்உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் எப்படி பாராளுமன்ற உறுப்பினராக அவர் இதுகாறும் இருந்திருக்க முடியும்? என வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பினார். 

தாய் பகை குட்டி உறவு என்ற கதையாகவல்லவா இருக்கின்றது? இவ்வாறான கருத்தை உடையவர் அவர்களால் உருவாக்கப்பட்ட கூட்டமைப்பின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக அரசியல் பிரவேசம் செய்திருக்கக் கூடாது. தனது கருத்துக்களை வெளிப்படையாக கூறி சுயேச்சையாக வாக்குக் கேட்டிருக்கலாம். அல்லது சிங்களக் கட்சிகள் ஊடாக வாக்குக் கேட்டிருக்கலாம். யாழ் தமிழ் மக்களின் தோளில் ஏறி பயணம் செய்து கொண்டு பெரும்பான்மையினரின் அடிவருடி போல் வேஷம் ஆடுவது சகிக்க முடியாது இருக்கின்றது என  தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் க.வி.விக்னேஷ்வரன் காட்டமாக தெரிவித்துள்ளார்

ஆயுதப் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாக அண்மையில் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்த கருத்திற்கு தமிழ் சமூகத்தின் பல தரப்பிலிருந்தும் கண்டனங்களும், எதிர்ப்புக்களும் உருவாகி வருகிறது.

இந்த நிலையில் வடக்கு முன்னாள் முதல்வரும் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்த ஊடக அறிக்கையில்,

சிங்கள தொலைக்காட்சி ஒன்றுக்கு திரு. சுமந்திரன் அவர்கள் வழங்கியிருந்த நேர்காணலைக் கண்டேன். அதிர்ச்சி அடைந்தேன். இவ்வாறானவர்களின் இத்தகைய பேச்சுக்களினால் சிங்கள மக்கள் மத்தியில் எமது போராட்டம் தொடர்பாகவும் எமது அரசியல் செயற்பாடு தொடர்பாகவும் தவறான எண்ணங்கள் ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளன. அத்துடன் சிங்கள அரசாங்கங்கள் தற்போது செல்லும் பாதை சரியென்று சிங்கள மக்கள் நினைக்கவும் வாய்ப்புண்டு. என் பழைய மாணவரான திரு.சுமந்திரன் பற்றி எந்தக் கருத்தும் கூறாது இருக்கவே நான் முயன்றேன். ஆனால் நண்பர்கள் பலரின் உந்துதலால் நான் என் கருத்துக்களை வெளியிடுகின்றேன்.

விடுதலைப் புலிகளின் அரசியல் மற்றும் ஆயுத அமைப்பை ஏற்றுக்கொள்ளவில்லை என்று திரு சுமந்திரன் கூறியுள்ளார். அப்படியென்றால் தம்பி பிரபாகரனால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் எப்படி பாராளுமன்ற உறுப்பினராக அவர் இதுகாறும் இருந்திருக்க முடியும்? தாய் பகை குட்டி உறவு என்ற கதையாகவல்லவா இருக்கின்றது? இவ்வாறான கருத்தை உடையவர் அவர்களால் உருவாக்கப்பட்ட கூட்டமைப்பின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக அரசியல் பிரவேசம் செய்திருக்கக் கூடாது.

தனது கருத்துக்களை வெளிப்படையாக வடமாகாணத்திலோ கிழக்கு மாகாணத்திலோ மக்களுக்குக் கூறி சுயேச்சையாக வாக்குக் கேட்டிருக்கலாம். அல்லது சிங்களக் கட்சிகள் ஊடாக வாக்குக் கேட்டிருக்கலாம். யாழ் தமிழ் மக்களின் தோளில் ஏறி பயணம் செய்து கொண்டு பெரும்பான்மையினரின் அடிவருடி போல் வேஷம் ஆடுவது சகிக்க முடியாது இருக்கின்றது. எனது பழைய மாணவரா இவ்வாறு பேசுகின்றார் என்று வெட்கமாக இருக்கின்றது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd