தமிழ் அரசியல் கைதிகளின் விவகாரம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இன்றிரவு நடைபெறவிருந்த சந்திப்பு இறுதி நேரத்தில் இரத்து செய்யப்பட்டது.
இரத்து செய்யப்பட்டமைக்கான காரணம் அறிவிக்கப்படவில்லை. எனினும், மற்றொரு திகதியில் சந்திப்பு இடம்பெறும் என, அலரிமாளிகையின் அதிகாரியொருவர் சுமந்திரனுக்கு அறியப்படுத்தியுள்ளார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் சுமந்திரனுக்கும் இடையிலான இந்த சந்திப்பு திகதி குறிக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த சந்திப்பின் போது, விடுதலை செய்யப்படவேண்டிய தமிழ் அரசியல் கைதிகளின் விபரங்கள் அடங்கிய பட்டியலை, பிரதமர் மஹிந்தவிடம் சுமந்திரன் கையளிப்பதற்கு ஏற்படாகியிருந்தது.
எனினும், தமிழ் அரசியல் கைதிகளின் பெயர் விபரங்கள் அடங்கிய மகஜர் ஒன்றை ஈழ மக்கள் ஜனாநயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான குழுவினர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் இன்று (12) மாலை கையளித்துள்ளனர்.
பிரதமரின் விஜயராம இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போதே குறித்த விடயம் உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கான தீர்வு கோரிய மகஜர் பிரதமரிடம் வழங்கிவைக்கப்பட்டது.
இதன்போது நீண்டகாலமாக சிறைகளிலிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டதுடன் அவர்களது பெயர் விவரங்கள் பிரதமரிடம் கையளிக்கப்பட்டன.
அத்துடன் காணாமல் போன உறவுகளின் கண்ணீருக்குப் பரிகாரம் காணப்படுவதை விரைவுபடுத்த வேண்டும் என்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் விஷேட குழுவினரால் பிரதமரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.