உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் இடம்பெறும் விசாரணைகளில் இன்று இரு சிறுவர்கள் கோட்டை நீதிவான் ரங்க திஸாநாயக்க முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டனர்.
குறித்த இரு சிறுவர்களும் விசேட சாட்சியாளர்களாக அங்கு விசாரணையாளர்களால் ஆஜர் செய்யப்பட்ட நிலையில், அவர்களிடம் இரகசிய வாக்கு மூலம் நீதிவானின் உத்தியோகபூர்வ அறையில் வைத்து பெறப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல்கள் தொடர்பில் இடம்பெறும் விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்ட, புத்தளம் - வனாத்தவில்லு , காரைத் தீவு பகுதியின் மத்ரஸாவில் அடிப்படைவாதம் போதிக்கப்பட்டு, ஆயுதப் பயிற்சி அளிக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ள தகவல்களை மையப்படுத்தியே குறித்த சாட்சியாளர்களான இரு சிறுவர்களும் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவித்தன.
சுமார் ஒரு மணி நேரத்துக்கும் அதிக நேரம் அவர்கள் நீதிவான் முன்னிலையில் சாட்சியம் அளித்துள்ளனர்.
இந்நிலையில் தற்போது, உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் குறித்த விசாரணைகளை 12 சி.ஐ.டி., சி.ரி.ஐ.டி. குழுக்கள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நுவன் வெதிசிங்கவின் கீழ் முன்னெடுத்துவருவதாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.