ராஜபக்சக்களின் திட்டமிட்ட அரசியல் பழிவாங்கலுக்காக சிறைச்சாலை செல்ல ஐக்கிய தேசியக் கட்சியினர் எந்நேரமும் தயாராகவுள்ளனர் என்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியினரிடம் சொல்லுங்கள். எனினும், நீதித்துறை தூங்கிக்கொண்டிருக்காது என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க, அக்கட்சியின் முக்கியஸ்தர்களிடம் தெரிவித்துள்ளார்.
ஐ.தே.கவின் முக்கிய உறுப்பினர்கள், கட்சியின் தலைவருடன் நேற்று தனிப்பட்ட ரீதியில் கலந்துரையாடிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,முன்னாள் அமைச்சர்களான மலிக் சமரவிக்கிரம, ரவி கருணாநாயக்கா, ராஜித சேனாரத்ன,தலதா அத்துக்கோறளை, பி.ஹரிஸன் உட்பட முன்னைய நல்லாட்சி அரசின் 17அமைச்சர்களுக்கு எதிராக நிதிக் குற்றவியல் பொலிஸ் பிரிவில் செய்யப்பட்டுள்ள முறைப்பாடுகள் தொடர்பில் உடனடி விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் எனப் பதில்பொலிஸ்மா அதிபர் தங்களிடம் உறுதியளித்திருக்கின்றார் என்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியைச் சேர்ந்த உறுப்பினர்கள் பகிரங்கமாகத் தெரிவித்துள்ள கருத்துக்களை ஐ.தே.கவின் முக்கியஸ்தர்கள் முன்வைத்துள்ளனர்.
இதற்குப் பதிலளிக்கும் போதே ரணில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கூறுகையில்,
ராஜபக்சக்கள் நினைத்த மாதிரி ராஜிதவை சிறைக்குள் தள்ளிவிட்டனர்.
எனினும்,அவர் தற்போது விளக்கமறியலில்தான் வைக்கப்பட்டுள்ளார். இனி ஐ.தே.கவிலுள்ள சிலரையும் அவர்கள் சிறைவைக்கக் கூடும், என்னையும் சிறை வைப்பர் என்றும் தெரிவித்தார்.
பொதுத்தேர்தலுக்காக அவர்கள் என்னவும்செய்யக்கூடும். ஆனால், நாம் பயந்து ஒளியும் கூட்டம் அல்ல. எல்லாவற்றுக்கும் நீதிமன்றமும் நாட்டும் மக்களும் ஒரு முடிவு கட்டுவர். எனவே, நாம் எதற்கும்அஞ்சாது இருப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.