பொது தேர்தலை ஜூன் மாதம் 20 ஆம் திகதி நடாத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலையும் பாராளுமன்றத்தை கலைத்த வர்த்தமானி அறிவித்தலையும் வலுவிலக்க செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் ஐவரங்கிய உயர் நீதிமன்ற நீதியசர்கள் குழாம் முன்னிலையில் இன்றும் நாளையும் பரிசீலிக்கப்படவுள்ளன.
இதற்காக நியமிக்கப்பட்ட பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரியவின் தலைமையிலான நீதியரசர்கள் குழாமில் உயர் நீதிமன்ற நீதியரசர்களான புவனகே அலுவிஹாரே, சிசிர டி ஆப்ரு, பிரியந்த ஜயவர்தன மற்றும் விஜித் மலல்கொட ஆகியோர் அடங்கியுள்ளனர்.
சட்டத்தரணி சரித குணரத்ன இது தொடர்பில் முதலாவது மனுவை தாக்கல் செய்த நிலையில், பின்னர் ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட 6 தரப்பினர் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
அவை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த மனுக்கள் என்பதால் அவற்றை பூரண நீதியரசர்கள் ஆயம் முன்பாக பரிசீலிக்குமாறு மனுதாராகளால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஆராய்ந்து ஐவரடங்கிய நீதிபதிகள் குழாமை நியமிப்பதற்கு கடந்த 14 ஆம் திகதி பிரதம நீதியரசர் தீர்மானித்திருந்தார்.
இந்த மனுக்களின் பிரதிவாதிகளாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மகிந்த தேசப்பிரிய, அதன் உறுப்பினர்களான ஜனாதிபதி சட்டத்திரணி என்.ஏ.ஜே.அபேசேகர, பேராசிரியர் ரத்னஜூவன் ஹ_ல், ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தர, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட மருத்துவர் அனில் ஜாசிங்க மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
இந்த மனுக்கள் தொடர்பில் முருதெட்டுவே ஆனந்த தேரர், பேராசிரியர் குணதாச அமரசேகர உள்ளிட்ட 11 பேர் இடையீட்டு மனுக்களை தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இன்றைய விசாரணைக்காக உயர்நீதிமன்றத்தின் 502 இலக்க அறை, சற்றுமுன்னர் திறக்கப்பட்டது.