web log free
December 23, 2024

இரத்தத்தால் தோய்ந்த முள்ளிவாய்க்கால் கண்ணீரில் நனைந்தது

இன்றைக்கு 11 வருடங்களுக்கு முன்னர் அதாவது, 2009 மே மாதம் 18 ஆம் திகதி, யுத்தம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது. 

அன்றும் அதற்கு முந்திய சில வாரங்களும் முள்ளிவாய்க்காலில் பேரவலம் அறங்கேறிக்கொண்டிருந்தது. 

இறுதி யுத்தத்தில் தமது உறவுகளை இழந்தவர்கள், கொரோனா வைரஸ் தொற்றுக்கான கட்டுப்பாடுகள் கடுமையாக விதிக்கப்பட்டிருந்த நிலையிலும் மனமுறுகி உணவுர்வுபூர்வமாக அனுஷ்டித்தனர்.

 தாய் மண்ணுக்காக உயிர்நீத்தவர்களுக்காக தீபமேற்றி அஞ்சலி செலுத்திய உறவுகள், கண்ணீர் மல்கி, அழுதுபுரண்டு, தம் உறவுகளுக்காக அஞ்சலி செய்து, பிரார்த்தனைகளிலும் ஈடுபட்டனர்.

இன்றைக்கு 11 வருடங்களுக்கு முன்னர் மனித இரத்ததால் தோய்ந்திருந்த அப்பூமி, எம் உறவுகளின் கண்ணீரால் கறைந்து, அங்கிருந்த உறவுகளுக்கு குருதிவாசம் தந்ததைப் போலிருந்தது எனலாம். 

அவ்வாறான உணர்வு பூர்வமிக்க மே மாதம் 18ஆம் நாள், நினைவேந்தல் 

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியில்  மிகவும் உணர்வு பூர்வமாக இன்று (18) இடம்பெற்றது

10.30 மணிக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டது. 

முள்ளிவாய்க்காலில் தனது கணவன் மற்றும் தனது பிள்ளையை பறிகொடுத்த  இலட்சுமணன் பரமேஸ்வரி என்பவரால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டது.

அத்துடன், ஏனைய  உறவுகளுக்கான சுடர்கள்  ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதோடு முள்ளிவாய்க்கால் நினைவு பிரகடனம் வெளியிடப்பட்டது

நாட்டில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலைமையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் சுகாதார நடைமுறைக்கு அமைவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

இருப்பினும் பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் இராணுவ புலனாய்வாளர்களின் நெருக்கடிகளுக்கு மத்தியில் மக்கள் ஒன்று கூடினர்.

சுகாதாரப் பிரிவினர் வருகை தந்து சுகாதார நடைமுறைகளை பார்வையிட்டு உறுதிப்படுத்திய பின்னர் உரிய சுகாதார நடைமுறைகளுக்கு அமைய இந்த நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக இடம்பெற்றிருந்தன.

இந்த நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் ஸ்ரீதரன் , சாள்ஸ் நிர்மலநாதன் , முன்னாள் வடக்கு மாகாண சபை அமைச்சர்களான அனந்தி சசிதரன் , கந்தையா சிவநேசன் , மாகாணசபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன் ,ஆண்டியையா புவனேஸ்வரன் ,  மற்றும் முன்னாள் யாழ். மாநகர மேஜர் இம்மானுவேல் ஆர்னோல்ட் மற்றும் ஜனநாயக மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர்  பிரபா கணேசன்  உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். 

Last modified on Thursday, 21 May 2020 09:31
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd