தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தம் முடிவுக்கு வந்த 11-வது ஆண்டை முன்னிட்டு மகிந்த ராஜபக்சே, விசேட அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், தமிழீழ விடுதலைப் புலிகளின் தோல்வியால் இலங்கையில் தமிழர்கள் சுதந்திரமாக வாழும் வாய்ப்பு உருவாகி உள்ளது என்று இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே கூறியுள்ளார்.
தமிழ் மக்களுக்கு எதிராக யுத்தம் புரியவில்லை. உலகின் கொடூரமான பயங்கரவாத அமைப்பு என அமெரிக்காவின் எப்.பி.ஐ. நிறுவனத்தினால் பெயரிடப்பட்ட அமைப்பிற்கு எதிராகவே யுத்தம் நடத்தினோம். தமிழீழ விடுதலைப் புலிகளின் தோல்வியில் தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழும் வாய்ப்பு உருவாகி உள்ளது.
தமிழ் சிறுவர்கள் தற்போது புலிகள் அமைப்பினால் கடத்திச் செல்லப்படுவதில்லை; தமிழ் அரசியல்வாதிகள் புலிகள் குறித்து அச்சத்துடன் வாழவில்லை. தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தேர்தல் நடத்தப்பட்டு மக்களின் இறையாண்மை அதிகாரம் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.
விடுதலைப் புலிகளை வென்று உலகை வியப்பில் ஆழ்த்திய இலங்கை இன்று கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தை நடத்தி வருகிறது. இவ்வாறு மகிந்த ராஜபக்சே அதில் கூறியுள்ளார்.