தமிழீழ இனப்படுகொலை நிகழ்த்தப்பட மே 18-ந் தேதியன்று இலங்கையில் 5 முக்கிய இணையதளங்கள் மீது மீண்டும் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
2009-ம் ஆண்டு இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தம் முடிவுக்கு வந்தது. இந்த இறுதி யுத்தத்தின் போது பல லட்சக்கணக்கான தமிழர்கள் கொத்து கொத்தாக படுகொலை செய்யப்பட்டனர்.
இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய இனப்படுகொலை நிகழ்வு இது. இலங்கை முள்ளிவாய்க்கால் நந்திக்கடலில்தான் இந்த இறுதி யுத்தம் முடிவடைந்தது.
ஆண்டுதோறும் மே 17, மே 18 ஆகிய நாட்கள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வாக உலகத் தமிழர்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. உலகத் தமிழர்கள் நேற்றும் இன்றும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை கடைபிடித்தனர்.
இதனிடையே இலங்கையின் 5 முக்கிய இணையதளங்கள் இன்று சைபர் தாக்குதலுக்குள்ளாகின.
தமிழீழம் சைபர் படையணி என்ற பெயரில் இலங்கை இணைய தளங்கள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ள்ன.
இலங்கைக்கான சீனாவின் தூதரக இணையதளம், ஹிரு செய்தி நிறுவனத்தின் இணையதளம் ஆகியவை சைபர் தாக்குதலில் சிக்கின. ஒவ்வொரு ஆண்டும் முள்ளிவாய்க்கால் நினைவு நாளான மே 18-ல் இலங்கையில் முக்கிய இணையதளங்கள் மீதான சைபர் தாக்குதல்கள் தொடருகின்றன.