மாவனெல்ல மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் புத்தர் சிலைகளை உடைத்த விவகாரம் தொடர்பிலான வழக்கில் ஆஜராகிய சட்டத்தரணிக்கு, ஈஸ்டர் குண்டுவெடிப்பின் பிரதான சந்தேகநபரான சஹ்ரான் ஹாசிம், 17 இலட்ம் ரூபாயை வழங்கியுள்ளமை விசாரணைகளிலிருந்து கண்டறியப்பட்டுள்ளது.
திஹாரியவிலுள்ள பெண் சட்டத்தரணியின் வங்கிக் கணக்கிற்கே இப்பணம் வைப்பிலிடப்பட்டுள்ளது.
சிரேஷ்ட சட்டத்தரணியின் அறிவுறுத்தலின் அமையவே, அந்த பெண் சட்டத்தரணி வங்கிக் கணக்கொன்றை திறந்துள்ளார் என்றும் சி.ஐ.டியினரின் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஆரம்பி்க்கப்பட்ட அந்த வங்கிக்கணக்குக்கு மாவனெல்ல பகுதியிலிருந்து மட்டுமே வைப்பிலிடப்பட்டுள்ளது.
அந்த பெண் சட்டத்தரணியை கைதுசெய்த சி.ஐ.டியினர் மேற்கொண்ட விசாரணைகளிலிருந்து மேற்படி விவகாரம் தெரியவந்துள்ளது.
இதேவேளை, வங்கிக் கணக்கை ஆரம்பிக்குமாறு ஆலோசனை வழங்கிய சிரேஷ்ட சட்டத்தரணி, அந்த 17 இலட்சம் ரூபாவில். வெறும் 30 ஆயிரம் ரூபாயை மட்டுமே பெண் சட்டத்தரணிக்கு வழங்கியுள்ளார் என அறியமுடிகின்றது.
தன்னுடைய இந்த வங்கிக்கணக்குக்கு இவ்வளவு பெருந்தொகை வைப்பிலிடப்பட்டமைக்கான காரணம் தனக்குத் தெரியாது என்றும் அப்பெண் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
பெண் சட்டத்தரணியின் வாக்குமூலத்தின் அடிப்படையில், சிரேஷ்ட சட்டத்தரணியிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன என குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.