கொவிட் - 19 வைரசுடன் உலகம் முழுவதும் சிறு குழந்தைகளுக்கு 'கவாசகி' எனும் நோய் பரவி வருவதாகவும், இலங்கையிலும் அந்த நோய் இருப்பதாக கொழும்பு சிறுவர் மருத்துவமனையின் விசேட வைத்திய நிபுணர் திபால் பெரேரா குறிப்பிடுகிறார்.
இந்த நோயானது 5 வயதிற்குக் குறைந்த சிறுவர்களைப் பாதிப்பதாகவும், பெற்றோர் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
05 நாட்களுக்கு மேலாக காய்ச்சல், கழுத்தில் சிவப்பு நிற கட்டி தோன்றிப் பருத்தல், நாக்கு ஸ்ட்ரோபெரிப் பழம் போன்று சிவப்பு நிறமாவது, கண்கள் சிவப்பு நிறமாக மாறுவது போன்றன இந்நோய்க்கான அடிப்படை அறிகுறிகளாகும் எனவும் விசேட வைத்திய நிபுணர் திபால் பெரேரா தெரிவித்தார்.
மேலும் பீஸீஜீ மருந்தேற்றல் கொடுக்கப்பட்டதன் பின்னர் கழுத்தைச் சுற்றி குமிழி குமிழியாகத் தோன்றும் சிறு கட்டிகள் மூலம் இதனைக் கண்டறியலாம்.
ஒரு வருடத்தில் 'கவாசகி' நோயினால் 50 - 100 பேர் பாதிக்கப்படுகின்றனர். என்றாலும், கொவிட் - 19 ஆட்கொல்லி நோய் பரவுவதன் மூலம் 'கவாசகி' எனப்படுகின்ற இந்த நோய் சிறு குழந்தைகளை பரவுகின்ற தன்மை அதிகரித்துள்ளதாக வெளிநாடுகளிலிருந்து தெரியவருகின்றது.
கொவிட் தொற்றுக்கு உள்ளாகின்ற சிறுவர்கள் பின்னர், இந்த நோய்க்கு ஆளாவதாகவும் தெரியவருகின்றது. 1967 ஆம் ஆண்டு இந்த நோய் முதன்முதலில் ஜப்பானிலிருந்தே அறியப்பட்டுள்ளது.
குறித்த அடையாளங்கள் சிறு பிள்ளைகளுக்குக் காணப்பட்டால் உடனடியாக அரசாங்கத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மருத்துமனைகளில் உள்ள விசேட வைத்தியர்களுக்கு உடனடியாகக் காண்பிக்க வேண்டும்.
இந்த நோய் சில குழந்தைகளுக்குத் தொற்றினால் அதன் மூலம் அவர்களின் இதயங்களையும் அந்த நோய் தாக்கும் வாய்ப்புள்ளது. சிலநேரம் குழந்தைகள் சிறுவயதிலேயே சிறுநீரக நோய்க்கு ஆளாவதற்கான வாய்ப்புக்களும் உள்ளது' எனவும் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்தார்.