web log free
February 05, 2025

பிரபாகரன் மரியாதைக்கு உரியவர்-பொன்சேகா.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மீது தமக்கு மரியாதை உண்டு என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

நாட்டில் மூன்று தசாப்தங்களாக நீடித்த போரின் இறுதிப் போருக்கு தலைமை தாங்கிய இராணுவத் தளபதியான சரத் பொன்சேகா இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தீவிரவாதி என்று நாங்கள் அவரை அடையாளப்படுத்தியிருந்த போதிலும் தலைவன் என்ற ரீதியில் இறுதி தோட்டா தீரும் வரையில் போராடிய காரணத்தினால் பிரபாகரன் மீது மரியாதை கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

2009ம் ஆண்டு மே மாதம் 19ம் திகதி முற்பகல் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, நாடாளுமன்றிலிருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றியதாகத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றிலிருந்து, இராணுவத் தலைமையகம் நோக்கிப் பயணித்த போது தொலைபேசி மூலம் பிரபாகரனின் சடலம் கிடைக்கப் பெற்றது என்ற செய்தி தமக்குக் கிடைக்கப்பெற்றது என அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமால் குணரட்ன தொலைபேசி மூலம் தமக்கு பிரபாகரனின் மரணம் பற்றிய தகவலை வழங்கியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

2009ம் ஆண்டு மே மாதம் 18ம் திகதி இலங்கை இராணுவம் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த அனைத்து பகுதிகளையும் தங்களது பூரண கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

எனினும் பிரபாகரன் உயிரிழந்த செய்தி கிடைக்கும் வரையில் ஆங்காங்கே சிற்சில சமர்கள் இடம்பெற்றதாக சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

மே மாதம் 17ம் திகதி ஆரம்பமான மோதல்கள் மே மாதம் 19ம் திகதி வரையில் நீடித்தது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd