கொழும்பு, கம்பஹா மாவட்டங்களை தவிர, ஏனைய மாவட்டங்களுக்கு இடையில் பஸ் போக்குவரத்துகள் எதிர்வரும் 26ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்படுமென்று, பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
இன்று (24) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இச்சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் கொழும்பு மற்றும் கம்பஹா தவிர்ந்த இலங்கையின் ஏனைய அனைத்து பிரதேசங்களிலும் பஸ் போக்குவரத்துகளை முன்னெடுக்க அனுமதி வழங்கப்படும். இ.போ.சபைக்கு சொந்தமான பஸ்களுக்கும் தனியார் பஸ்களுக்கும் தேவையான அனைத்து ஆலோசனைகளும் வழங்கப்பட்டுள்ளன. சுகாதார பிரிவினரினால் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகளுக்கு அமைய, பஸ் சேவைகளை முன்னெடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அத்தோடு, ஆசன எண்ணிக்கைக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிக்கொண்டு செல்ல அனுமதி வழங்க முடியாது. எதிர்காலத்திலும் இவ்வாறு முன்னெடுக்க நாம் எதிர்பார்த்துள்ளோம்.
பஸ்கள் போதியளவு இல்லா விட்டால், நாம் அவற்றை கொண்டு வருவோம். சேவையில் ஈடுபடாத பஸ்களையும் நாங்கள் சேவையில் ஈடுபடுத்தவுள்ளோம் என்றார்
பஸ்களில் ஏறியவுடன் உட்கார்ந்து செல்வதற்கு அனைத்துப் பயணிகளுக்கும் உரிமை உண்டு. கட்டணத்தை அதிகரிக்க நாம் அனுமதிக்க மாட்டோம்” என்றார்