web log free
December 23, 2024

புலிகளின் தங்கம் வழியில் செல்கிறது கோத்தா அரசு

கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்திருக்கின்ற இலங்கை அரசாங்கம், விடுதலைப் புலிகளின் வழியைப் பின்பற்றுவதற்கான ஒரு சமிக்ஞையை வெளியிட்டிருக்கிறது.

1990 ஆம் ஆண்டு, ஜூன் மாதம் விடுதலைப் புலிகள் இரண்டாவது கட்ட ஈழப்போரைத் தொடங்கிய பின்னர், கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொண்டனர்.

அப்போது புலிகள் தமது படைக் கட்டுமானத்தை அடுத்த கட்டுத்துக்கு கொண்டு செல்ல வேண்டிய நிலையில் இருந்தார்கள்.

அதற்காக, பெருமளவில் ஆயுதங்களை வாங்க வேண்டியிருந்தது. புதிதாக உருவாக்கும் படைக் கட்டமைப்புகளுக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியிருந்தது. அதற்கு பெருமளவில் நிதி தேவைப்பட்டது.

அந்த நிதியை புலிகளால், தமிழ் மக்களிடம் இருந்தே பெற வேண்டிய நிலையும் இருந்தது.அப்போது, புலம்பெயர் தமிழர்களிடம் பெரியளவில் பலம் இருக்கவில்லை. அவர்களை ஒருங்கிணைப்பதற்கான கட்டமைப்புகளும் பெரிதாக பலம்பெற்றிருக்கவில்லை. அங்கிருந்தும் கிடைக்கும் நிதி போதுமானதாக இருக்கவில்லை.

இந்தநிலையில், தமது கட்டுப்பாட்டில் உள்ள மக்களிடமே நிதியை திரட்ட புலிகள் முடிவு செய்தனர். அதற்கு முன்னரும், புலிகள் தமிழ் மக்களிடம் நிதி திரட்டியிருந்தனர்.

 1990 இல் அவர்கள் அறிமுகம் செய்த திட்டத்துக்கும் பெரும் வித்தியாசம் இருந்தது. தமிழீழ மண் மீட்பு நிதி என்ற பெயரில் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டது.

ஒரு குடும்பம், 2 பவுண் தங்கத்தை கடனாக கொடுக்க வேண்டும், கட்டம் கட்டமாக அந்த கடன் திருப்பி செலுத்தப்படும் என்று நிதித்துறை பொறுப்பாளராக இருந்த தமிழேந்தி அறிவித்திருந்தார்.

அப்போது ஒரு பவுண் தங்கத்தின் மதிப்பு 5000 ரூபா. 2 பவுண் தங்கத்தை கொடுக்க முடியாதவர்கள், 10 ஆயிரம் ரூபாவைக் கொடுக்கலாம் என்ற மாற்றுத் திட்டமும் முன்வைக்கப்பட்டது.

 புலிகள் தங்கத்தை கடனாக கேட்ட போது, அதற்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியது. ஆனால் புலிகள், பல்வேறு உத்திகளையும், வழிகளையும் கையாண்டு பெருமளவானோரிடம் தங்கத்தை கடனாக பெற்றனர்.

அப்போது வடக்கு புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. வடக்கில் இருந்து வெளியேற வேண்டுமானால், அவர்களின் பாஸ் அனுமதியை பெற வேண்டும். தங்கத்தை கொடுத்த பற்றுச்சீட்டை காண்பித்தால் தான், பாஸ் கிடைக்கும். இதுபோன்ற பல வழிகளின் மூலம், புலிகள் அந்த தங்க கடன் திட்டத்தை வெற்றிகரமாகவே நடைமுறைப்படுத்தியிருந்தனர்.

 தமிழீழ மண்மீட்பு நிதியாக பெற்ற கடனை திருப்பிச் செலுத்துவதாக அளித்த வாக்குறுதியையும் அவர்கள் காப்பாற்றினார்கள். மாதம் தோறும், 100 பேர் குலுக்கல் மூலம் தெரிவு செய்யப்பட்டு, ஆண்டு தோறும் மாவீரர் நாளை அண்டிய காலத்தில், 1200 பேருக்கு கடன் மீளளிப்புச் செய்தனர்.

1990 இல் கொடுக்கப்பட்ட கடன், இறுதிக் கட்டப் போர் ஆரம்பிக்கும் வரை தொடர்ந்து மீளளிப்புச் செய்யப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. புலிகளிடம் போன தங்கம் திரும்பக் கிடைக்காது என்று வெளிப்படையாக விமர்சித்தவர்கள் பலரும், தங்கம் மீளக் கிடைத்த போது, கொண்டாடி மகிழ்ந்தனர்.இதுபோன்றதொரு திட்டத்தை, இலங்கை அரசாங்கம் வரும் நாட்களில் நடைமுறைப்படுத்தினால் ஆச்சரியப்பட முடியாது என்ற நிலையே இப்போது காணப்படுகிறது.

அதற்கான ஒரு சமிக்ஞை, அரசாங்கத் தரப்பில் இருந்து வெளிப்பட்டிருக்கிறது. பொதுஜன பெரமுனவின் பிரமுகரான முன்னாள் அமைச்சர் சி.பி.ரத்நாயக்க, 1998 ஆம் ஆண்டு தென்கொரியாவில் வெளிநாட்டு நாணய நெருக்கடி ஏற்பட்ட போது, தம்மிடம் இருந்த தங்கத்தை, அந்த நாட்டு மக்கள் அரசாங்கத்திடம் கையளித்த முன்னுதாரணத்தை எல்லா இலங்கையர்களும் பின்பற்ற வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

தென்கொரியாவில் 1998 இல் என்ன நடந்தது என்பதை பார்த்து விட்டு, இலங்கை விவகாரத்துக்கு வருவது பொருத்தம். 1997ஆம் ஆண்டு தென்கொரியா கடுமையான நிதி நெருக்கடிக்குள் சிக்கியது. தென்கொரியா வெளிநாட்டுக் கடனை திருப்பி செலுத்த முடியாமல் திணறியது.அப்போது தென்கொரியா கிட்டத்தட்ட 304 பில்லியன் டொலர் வெளிநாட்டு நாணய மாற்றுக் கடனை திருப்பி செலுத்த வேண்டியிருந்தது.

இலங்கையில் உடனடியாக பொருளாதார நெருக்கடியை தீர்க்காது. இவ்வாறான நிலையில், அரசாங்கம் மாற்று வழிகள் பலவற்றை நாடக் கூடும். வங்கிகளில் வைப்பிலிடப்பட்டுள்ள பணம், தங்க சேமிப்பு உள்ளிட்ட பலவற்றில் கை வைக்கும் நிலைக்கு அரசாங்கம் தள்ளப்படலாம்.

இத்தகைய நிலையில் வேறு ஒரு தெரிவோ வழியோ அரசாங்கத்துக்கு இல்லாத போது, இந்த ஆயுதம் கையில் எடுக்கப்படும் வாய்ப்புகள் அதிகம்.

அதுவும் சிங்கள பௌத்த தேசியவாதத்தை முன்னிறுத்தும் ஒரு அரசாங்கம், அந்த தேசியவாதத்தையே தமக்குச் சாதகமானதாக திருப்பிக் கொள்ளவும் முடியும்.

எனவே, தங்கத்தை கோரும் திட்டம் அறிவிக்கப்படாது என்று கூறுவதற்கில்லை. அவ்வாறு அறிவிக்கப்பட்டால், அந்த கொடையை பெறுவதற்கு புலிகளின் பாணியில் முயற்சிகள் மேற்கொள்ளப்படுமா அல்லது, தென்கொரிய பாணியில் பெறப்படுமா என்றும் தெரியவில்லை.

எவ்வாறாயினும், தற்போதைய அரசாஙகம் தங்கத்தை பெறும் திட்டத்தை அறிவித்தால் அதற்கு கடுமையாகவே எதிர்ப்புகளும் கிளம்பும். அந்த எதிர்ப்புகளை இந்த அரசாங்கம் கணக்கில் எடுத்துக் கொள்ளாது என்பதே உண்மை.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd