சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் மறைவையிட்டு, ஒட்டுமொத்த பெருந்தோட்ட மக்களுக்கும் நான் தனிப்பட்ட ரீதியில் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கின்றேன். அவர் இறப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் என்னை சந்தித்து இறுதியாக கலந்துரையாடிய தருணத்தை என்னால் மறக்க முடியாது. என்னை சந்தித்து இறுதியாக உரையாடிய அந்த தருணத்திலும் தனது மக்கள் தொடர்பாகவே கவனம் செலுத்தியதை நான் பெரிதும் மதிக்கின்றேன்.
கொவிட்-19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை விரைவாக இயல்பு நிலைக்கு கொண்டுவர வேண்டுமென தனது வாழ்க்கையின் இறுதி தருணத்தில் என்னுடன் கலந்துரையாடியதை நான் நினைவு கூருகின்றேன்” என பிரதமர் மகிந்த ராஜபக்ச இன்று வெளியிட்டுள்ள இரங்கற் செய்தியில் தெரிவித்திருக்கின்றார்.
பிரதமர் இன்று வெளியிட்டுள்ள செய்தியின் முழுவிபரம் வருமாறு;
கொவிட்-19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை விரைவாக இயல்பு நிலைக்கு கொண்டுவர வேண்டுமென தனது வாழ்க்கையின் இறுதி தருணத்தில் என்னுடன் கலந்துரையாடியதை நான் நினைவு கூருகின்றேன்.
தொண்டமான் பரம்பரைக்கும் பெருந்தோட்ட மக்களுக்கும் இடையில் ஒரு வலுவான உறவு காணப்படுகின்றது. ஆறுமுகம் தொண்டமானின் பாட்டனார் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் காலத்திலிருந்தே தமது மக்களுக்கு சேவை செய்துள்ளனர். அவர்கள் செய்த தியாகங்களின் பிரதிபலனாகவே இன்று தோட்டத் தொழிலாளர்கள் பல சலுகைகளை அனுபவிக்கின்றனர். குறிப்பாக பெருந்தோட்டத் துறையினருக்கு குடியுரிமை வழங்குவதிலும், அவர்கள் இந்நாட்டின் குடிமக்களாக வாழவும் தொண்டமான் பரம்பரையினர் மகத்தான சேவையை செய்துள்ளனர்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மறைந்த தலைவர் ஆறுமுகம் தொண்டமான் ஜனநாயகத்தை பாதுகாக்க அர்ப்பணிப்புடன் செயற்பட்டார். தோட்ட மக்களிடையே பயங்கரவாதம் மற்றும் அதனுடன் தொடர்புடைய விடயங்களை அனுமதிக்காத பெருமை ஆறுமுகம் தொண்டமானையே சாரும். பயங்கரவாதத்திற்கு எதிரான போரின் போது, நாட்டை பிளவுபடுத்தும் சக்திகளுக்கு எதிராக ஒரு ஜனநாயக தலைவராக அரசாங்கத்திற்கு அவர் வழங்கிய ஆதரவு மிக முக்கியமானது.
மக்களை வழி நடத்தும் தத்துவார்த்த கனவுகளுடன் செயற்பட்டாரே தவிர, பிரிவினைவாதத்தை விதைத்து வாக்குகளை பெறும் கொள்கை அவருக்கு இருக்கவில்லை. அவரது பகுதியிலுள்ள சகல சமூகத்தினரதும் ஆதரவு அவருக்கு காணப்பட்டது. பெருந்தோட்ட தமிழ் மக்களிடையே இன, மத வேறுபாடுகள் அற்ற உன்னத மனிதர்கள் இருக்கின்றனர் என்பதை அவர் உலகிற்கு சுட்டிக்காட்டியுள்ளார். தனது மக்களின் வாழ்வியல் தேவைகளை பூர்த்தி செய்யும் போது அவர்களின் வாழ்க்கையை பாதுகாப்பானதாகவும், வசதியாகவும் மாற்றுவதற்கான தூரநோக்கு சிந்தனை அவரிடம் காணப்பட்டது. தோட்டப் பகுதிகளுக்கு வீடுகள், சிறந்த வேலைவாய்ப்பு, சம்பளம், நெடுஞ்சாலைகள், மின்சாரம் மற்றும் பல்கலைக்கழகம் போன்றவற்றை பெறுவதில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டார். தோட்ட மக்களை அவர் ‘எமது மக்கள்’ என்ற சகோதர உணர்வுடனேயே எப்போதும் அழைப்பார். எமக்கும் அவருக்கும் நீடித்த சிறந்த நட்பு காணப்பட்டது. ஆகையால் அமரர் ஆறுமுகம் தொண்டமானை வேதனையுடன் நினைவு கூருகின்றோம். அவரின் நினைவை என்றும் எம் இதயத்தில் வைத்திருப்போம்.