கொழும்பு கோட்டையில் உள்ள கஃபூர் கட்டிடம் கட்டிடத்தில் தங்கியிருந்த கடற்படை வீரரே கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டார் என வெளியாகும் தகவல்களை இலங்கை கடற்படை முற்றாக நிராகரித்துள்ளது.
கடற்படையின் அம்புலன்ஸ் சாரதியே கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளார் அவர் வெலிசர கடற்படை முகாமை சேர்ந்தவர் என கடற்படை தெரிவித்துள்ளது.
வெலிசர கடற்படை மருத்துவமனையே சேர்ந்த அம்புலன்ஸ் சாரதியும்,சில தொழில்நுட்ப பணியாளர்களும் கஃபூர் கட்டிடத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தனர் என தெரிவித்துள்ள கடற்படை பேச்சாளர் இசுறு சூரியபண்டார அவர்களை கடற்படையினர் மத்தியில் பரவிவரும் கொரோனா வைரசிலிருந்தும் பொதுமக்களிடமிருந்தும் தக்கதருணத்தில் பிரித்து வைப்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.
அவர்கள் வெலிசர முகாமிலிருந்து அகற்றப்பட்டு பணிகள் அற்ற நேரங்களில் கஃபூர் கட்டிடத்தில் தங்கவைக்கப்பட்டனர் என அவர் தெரிவித்துள்ளார்.
கடற்படையின் அம்புலன்ஸ் சாரதி கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளார் அவரையும் அங்கு தங்கியிருந்த ஏனையவர்களையும் 14 நாட்களிற்கு தனிமைப்படுத்த உத்தரவினை வழங்கியுள்ளோம் என கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை குறிப்பிட்ட கட்டிடத்தில் தங்கியிருந்த 200 கடற்படையினரும் தனிமைப்படுத்தல் முகாம்களிற்கு மாற்றப்பட்டுள்ளனர் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயம் அனில் ஜசிங்க தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட கட்டிடம் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை அந்த கட்டிடத்தில் தங்கியிருந்த அனைத்து கடற்படையினரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் மக்கள் அச்சம் கொள்ளதேவையில்லை என கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.