நுவரெலியா மாவட்டத்தில் இன்று (30) அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் காரணமாக ஹட்டன், பொகவந்தலாவ, நோர்வூட், டிக்கோயா, மஸ்கெலியா, கொட்டகலை மற்றும் நானுஓயா நகரங்கள் வெறிச்சோடி காணப்படுகின என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான மறைந்த ஆறுமுகம் தொண்டமானின் மறைவையொட்டி நகரமெங்கும் வெள்ளைகொடிகள் தொங்கவிடப்பட்டுள்ளன.
தொண்டமானின் பூதவுடல் அன்னாரின் கொத்மலை வெவன்டனிலுள்ள பூர்வீக இல்லத்திலிருந்து நானுஓயா தலவாக்கலை வழியாக கொட்டகலை சீ.எல்.எப் நிலையத்திற்கு கொண்டு வரும் போது பொதுமக்கள் ஆங்காங்கே வீதியின் இரு மருங்கிலும் நின்று அஞ்சலி செலுத்த தயாராகியிருந்தனர். எனினும் ஊரடங்கால் அது கைவிடப்பட்டது.
அத்துடன் தொண்டமானின் மரண வீட்டிற்கு சென்ற பலர் எச்சரிக்கை விடுக்கப்பட்டு திரும்பியனுப்பப்பட்டனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா சுகாதார பாதுகாப்பு காரணங்களுக்காக வெளியார் எவரும் அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.