அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக, மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மகன் ஜீவன் தொண்டமான் வேட்பு மனுவில் கைச்சாத்திட்டார்.
ஆறுமுகன் தொண்டமான், நுவரெலியா மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் போட்டியிடுவதற்கு வேட்புமனுவில் கைச்சாத்திட்டார்.
அவரது மறைவுக்கு பின்னர் ஏற்பட்ட வெற்றிடத்துக்கே, ஜீவன் தொண்டமான் நியமிக்கப்பட்டுள்ளார்.
கொட்டகலையிலுள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமையகத்தில் வைத்தே, வேட்பு மனுவில் கைச்சாத்திட்டார்.
அப்போது, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அதிகாரிகள் மற்றும் சட்டத்தரணிகள் ஆகியோரும் உடனிருந்தனர். அப்போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப- தலைவர்களான ஏ.பி.சக்திவேல், மருதபாண்டி ராமேஸ்வரன், சட்டத்தரணி பீ.இராஜதுரை, தொண்டமானின் குடும்ப அங்கத்தவர்கள் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.
இதேவேளை, மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மரண ஊர்வலத்தில், மகன் ஜீவன் தொண்டமான் வாகனமொன்றின் மேல் இருந்தவாறு கைகளை கூப்பி வணக்கம் செலுத்திகொண்டு வந்தார். இது தேர்தல் சட்டத்துக்கு முரணானது என்றும் அவருக்கு எதிராக சட்டரீதியில் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்றும் பல தரப்பினரும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
எனினும், அப்போது ஜீவன் தொண்டமான் ஆறுமுகனின் மகன் மட்டுமே ஆவார். அவருக்கு எதிராக தேர்தல் சட்டத்தின் கீழ் நடவடிக்கைகளை எடுக்கமுடியாது என்று தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக அறியமுடிகின்றது.