ஐக்கிய மக்கள் சக்தியின் மாத்தறை மாவட்டத்தின் சார்ப்பில் வேட்புமனு தாக்கல் செய்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர எதிர்வரும் தேர்தலில் போட்டியிட போவதில்லை என அறிவித்துள்ளார்.
வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கம் தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ள நிலையில் அவருக்கு மாத்தறை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி ஊடாக விருப்பு இலக்கம் 8 வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவர் வௌியிட்டுள்ள அறிக்கையில் இன்று முதல் தன்னுடைய பாராளுமன்ற அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க தீர்மானித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது
ஐக்கியதேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரிற்கும் அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் மங்களசமரவீர இதனை தெரிவித்துள்ளார்.
பொதுத்தேர்தலில் போட்டியிடுவதை தவிர்க்கப்போவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
மாத்தறை வேட்பாளர்களை தனக்கு வாக்களிப்பதை தவிர்த்துக்கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதேவேளை மாத்தறையில் உள்ள தனது இல்லத்தில் உள்ளுர் ஆட்சி பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ள மங்களசமரவீர தனது முடிவு குறித்து அவர்களிற்கு தெரியப்படுத்தியுள்ளார்.
கோத்தபாய ராஜபக்சவின் ஆட்சி திறமையற்றது குறுகியநோக்கங்களை கொண்டது என்பது ஆறுமாத காலத்திற்குள் நிருபிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவின் ஆட்சியின் கீழ் இன மத அடிப்படையிலான பிரிவினைகள் ஆழமாக்கப்படுகின்றன என தெரிவித்துள்ள மங்களசமரவீர நாடு இராணுவமயப்படுத்தப்படுகின்றது என குறிப்பிட்டுள்ளார்.
நாடுமிகமோசமான சவால்களை ஆபத்தினை எதிர்கொண்டுள்ள இந்த தருணத்தில் தனது கடமை என்னவென்பது குறித்து எதிர்கட்சிக்கு தெளிவான புரிந்துணர்வில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடு மீண்டும் கட்டியெழுப்பப்படவேண்டுமென்றால் ஐக்கியதேசிய கட்சியின் அடிப்படை கொள்கைகளிற்கும் விழுமியங்களிற்கும் உயிர்கொடுக்கவேண்டும் என தெரிவித்துள்ள மங்களசமரவீர இதன் காரணமாக கட்சியில் ஏற்பட்டுள்ள பிளவு குறித்து ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளார்.