முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
சர்ச்சைக்குரிய வெள்ளை வேன் ஊடகவியலாளர் சந்திப்பு தொடர்பில் கடந்த மே 13ஆம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன மீண்டும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இன்றையதினம் (10) கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்தினால் குறித்த உத்தரவு வழங்கப்பட்டது.
கடந்த வருடம் நவம்பர் 10 ஆம் திகதி இடம்பெற்ற வெள்ளை வேன் ஊடகவியலாளர் சந்திப்பு வழக்கு தொடர்பில், முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு கடந்த டிசம்பர் 24ஆம் திகதி பிடியாணை வழங்கப்பட்டதை அடுத்து அவர், டிசம்பர் 26ஆம் திகதி லங்கா ஹொஸ்பிடல் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், டிசம்பர் 27ஆம் திகதி கைது செய்யப்பட்டதோடு, டிசம்பர் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிடப்பட்டார்.
வைத்தியசாலையில் தொடர்ந்தும் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு, டிசம்பர் 30ஆம் திகதி, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பிணை வழங்க உத்தரவிட்டது.
ஆயினும், குறித்த நீதவான் நீதிமன்றத்தின் பிணை உத்தரவை எதிர்த்து, சட்டமா அதிபரினால் கடந்த ஜனவரி 08ஆம் திகதி மீளாய்வு மனு விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டது.